60வருடங்களை கடந்து தோண்டியெடுக்கப்பட்டதே மண்டூர் பாரதி

(படுவான் பாலகன்) இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில், மண்டூரில் இருந்து 1948 – 1950 ஆண்டுவரையான காலப்பகுதியில் வெளிவந்த பாரதி சஞ்சிகையின் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு  சனிக்கிழமை மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சி.சந்திரசேகரத்தினை தொகுப்பாசிரியராக கொண்டு, மண்டூர் கலை இலக்கிய அவையினால் இந்நூல் வெளியீடு செய்யப்பட்டது.
வெளியீட்டு நிகழ்வில், பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, சோலைக்கிளி ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினர்.
ஈழத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து மறுமலர்ச்சி, கொழும்பிலிருந்து பாரதி, திருமலையிலிருந்து எரிமலை ஆகிய சஞ்சிகைகள் ஆரம்ப காலத்தில் வெளிவந்த சஞ்சிகைகளாக கூறப்படுகின்றன. அவற்றோடு மண்டூர் பாரதி சஞ்சிகையும் இடம்பிடிக்கின்றது. இதனை பண்டிதர் ம.நாகலிங்கம், கு.தட்சணாமூர்த்தி, ந.செபரெத்தினம் ஆகியோர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.
மொத்தமாக 10சஞ்சிகைகளே வெளிவந்துள்ளன. வெளிவந்தவையும், பெட்டங்களில் மறைந்து காணப்பட்ட நிலையில், பல வருடங்களின் பின் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அது தொடர்பில் கட்டுரைகள் பலவும் வெளிவந்த நிலையில், அதுதொடர்பான தொகுப்புநூல் வெளியீடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சஞ்சிகைகள் சிதைந்து, அழிந்த நிலையில், குறிப்பாக 60வருடங்களை கடந்த பின்பே மண்டூர் பாரதி சஞ்சிகை தொகுப்புநூலாக்கப்பட்டுள்ளது.