கிழக்கில் பதவி ஆசையால் பரப்பப்படும் இனவாதக்கருத்துக்கள்

                                                                        (படுவான் பாலகன்)

 பெற்றெடுத்த தாய், பிறந்த மண், இனம், மொழி, மதம் என தாம் சார்ந்த விடயங்களுக்கு ஒவ்வொரு மனிதனும் அதிகம் முக்கியத்துவமளிக்கின்றான். அம்முக்கியத்துவம் அதீதப்படுத்தப்படுகின்றபோது, முரண்பாடுகள் தானாகவே ஏற்படுகின்றன. தாம் சார்ந்து சிந்திப்பது தவறில்லையாயினும், மற்றவரை அல்லத ஏனைய ஓர் இனத்தை இல்லாமல் செய்யவேண்டுமென நினைப்பதுவே அழிவுக்கு வித்திடுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்தோன்றிய வரலாறுகளும், இலக்கியங்களும் அவற்றினை பறைசாற்றியும் இருக்கின்றன. மனிதம் என்ற ஒன்றால் மட்டும் இணைவோமானல் எந்ததொரு பிரச்சினைகளும், எங்கேயும், எப்போதும் எழுவதற்கு வாய்ப்பில்லை. அவ்வாறானதொரு சூழலை இலங்கை நாட்டிலும் கொண்டுவருவதற்கு எத்தணித்தாலும், அவை நல்லாட்சியில் சாத்தியப்படுமா என்பது பலருக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தாமலும் இல்லை. ஏனெனில் மதம் சார்ந்து அதிகம் சிந்திக்கின்ற தாம் மட்டுமே இருக்க வேண்டுமென்று நினைக்கின்ற மதவாதிகளும், தமது இனம் மட்டுமே நிலைக்க வேண்டும், ஏனைய பிற இனத்தினை அழிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட இனவாதிகளும் முற்றாக இந்த நாட்டில் இல்லாமல் இல்லை. இதனால்தான் இத்தனை வருடங்களாக தமக்கான உரிமையினை வேண்டி போராடிக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு உரிமையை கொடுப்பதற்கு தயங்கி நிற்கின்;ற சமூகம் இந்த நாட்டிலே இருந்து கொண்டிருக்கின்றது.
நாட்டில் யுத்தம் நிறைவுபெற்றாலும், இனவாத கருத்துக்கள் இன்னும் நிறைவு பெற்றதாக தெரியவில்லை. ஏனெனில் அடிக்கடி இனவாத கருத்துக்கள் மக்களிடையே கட்டவிழ்த்துப்படுவதாக ஊடகங்களில் கருத்துக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை இன்னும் இந்த நல்லாட்சியை சீர்குலைக்கும் வகையில் இனவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதனை பறைசாற்றுகின்றது. நாட்டில் இவ்வாறிருக்கையில், கிழக்கு மாகாணம் மூன்று இனமக்களையும் கொண்டுள்ளது. கிழக்கு மாகாண ஆட்சியிலும் மூன்று இனத்தினைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து ஆட்சியினையும் நடாத்திக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக முஸ்லிம் இனத்தினைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகவும், ஏனைய அமைச்சர்களாக தமிழ், சிங்களம், முஸ்லிம் இனங்களைச் சேர்ந்தவர்களும் ஆட்சியில் இருந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வாட்சிக் காலம் நிறைவுபெறுவதற்கு சிறிது காலங்களே உள்ளதான நிலையில், இன ரீதியான கருத்துக்கள் பலரால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசியல் ரீதியாக சுயலாபங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கிலே இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகவும் ஒருசாரார் கூறுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தின் ஆட்சியிலே முதலமைச்சர் பதவியை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் பிடிக்க வேண்டும். அதேபோல அதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிடிக்க வேண்டும். என அக்கட்சி சார்ந்த ஆர்வலர்களாலும், அரசியல்வாதிகளாலும் கூறப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்சியும் தமக்கான இருப்புக்களை தக்கவைத்துக் கொள்வதற்காக மக்களின் செல்வாக்கைப்பெற நினைப்பதில் தவறில்லை. அதனை போட்டியாகக் கூட பார்க்கலாம். அதற்காக இனவாதங்களை முன்வைத்து செல்வாக்கை தேட நினைப்பது இனங்களுக்கிடையில் முரண்பாட்டினை ஏற்படுத்த வழிவகையாகிவிடும்.

தற்கால சூழலில் தமிழ்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து செயற்பட வேண்டும். அதன் மூலமாகதான் உரிமைகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். எமது கரங்களும் ஒன்றாக ஒலிக்கும் என அரசியல்வாதிகளும், ஆர்வலர்களும் கூறிவருகின்றனர். அதேபோன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றுசேர வேண்டும். அதன்பயனாக கிழக்கு மாகாணத்தில் மீண்டும் அமைச்சுப்பதவிகளை பெற்று ஆட்சியமைக்க முடியும் என்றதொனியில் அவர்கள் சார்ந்த தலைமை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கூறிவருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில்தான் தமிழர்கள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண ஆட்சியினை கைப்பற்றி முதலமைச்சு பதவியினைப் பெற வேண்டுமென, முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் கருத்தொன்றினை வெளியிட்டிருந்தார்.

இக்கருத்துக்கு எதிர்கருத்துக்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. குறிப்பாக கடந்தகால ஆயுத வன்முறைக் காலத்தில், கிழக்கில் இனப்படுகொலை புரிந்து, முஸ்லிம் சமூகத்தை அழிக்க நினைத்து, திட்டம் வகுத்து, அதனை தலைமை தாங்கி நடத்திய “கருணா” எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மீது, விசாரணை நடத்தப்பட வேண்டும்” “சம காலத்தில் முஸ்லிம்களைப்பற்றி கருணா வெளியிடும் கருத்துகள், கருணா ஆயுத பலத்தோடு இருந்த காலத்தில் எவ்வாறு முஸ்லிம்கள் மீது இனப்படுகொலைகளைச் செய்திருப்பார் என்பதற்குத் தக்க சான்றாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

“அன்று எவ்வாறு முஸ்லிம்களைக் கிழக்கிலிருந்து அழித்தொழிக்க முயன்றாரோ, அதனையே தற்போதும் மாற்று வழிகளில் செய்து வருகின்றார். “எனவே, முஸ்லிம் – தமிழ் சமூக உறவைச் சீரழிக்க நினைக்கின்ற கருணா போன்ற துரோகிகளுக்கு, காலம் தக்க பதிலளிக்கும்” என, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான இனவாதத்தை தாம் சார்ந்த மக்கள் மத்தியில் புகுத்தும் வகையில் அமைந்துள்ள இக்கருத்துக்கமைய கருணாவின் கருத்தினை முஸ்லிம் மக்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட கருத்தாக அம்மக்கள் பார்த்தனர் என்பதுடன் இனவாதமாக தற்போதும் கருதி வருகின்றனர் என்றே கூறமுடியும்.

கருணாவின் கருத்தினை தொடர்ந்து, எதிர்கருத்துக்கள் வெளிவந்த நிலையில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறுக் அண்மையில் கருத்தொன்றினை முன்வைத்திருந்தார். அக்கருத்துக்கு எதிராகவும் தமிழ் தரப்பினரிடமிருந்து, கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

தமிழ் மக்களுடைய கையில், நிர்வாகம் மற்றும் அரசியல் அதிகாரமும் செல்லுமாகவிருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் சமூகம் ஓர் அடிமைச் சமூகமாக மாறிவிடும் என்ற கருத்தினை கூறியிருந்தார். இக்கருத்துக்கு எதிர்ப்பாக ரெலோ அமைப்பின் நிர்வாக செயலாளர் நித்தி மாஸ்டர் கருத்தொன்றினை வெளியிட்டிருந்தார். குறிப்பாக தமிழர்கள் எப்பொழுதும் யாருக்கும் அடிமையாகி இருந்ததில்லை. எவரையும் அடிமையாக பார்க்கவும் இல்லை. மாகாணசபை உறுப்பினரின் கருத்து, தமிழ் மக்களுக்கு எதிரான யுத்த பிரகடனமா? கிழக்கு முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரே ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அவரை கிழக்கு மாகாண தமிழர்களோ, கூட்டமைப்போ உதாசீனம் செய்யவுமில்லை. இன்று வரையில் நியாயமற்ற முறையில் ஆட்சியைக் கைப்பற்றிய மு. காவை ஒருபோதும் இனவாதக்கண் கொண்டு நோக்கவுமில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றமை, இனவாத நோக்குடன் மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறுக் பேசியிருக்கின்றார் என்ற பதிவு தமிழ் மக்களிடத்தில் சென்றிருக்கின்றது.

அதேபோன்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பட்டிருப்பு தொகுதியின் தமிழரசுக் கட்சியின் அமைப்பாளருமான பா.அரியநேந்திரன் மாகாணசபை உறுப்பினருக்கு எதிர்கருத்தொன்றினை வெளியிட்டிருந்தார். குறிப்பாக, சிறுபாண்மை சமூகங்களுக்கிடையே இனவாதக் கருத்தை விதைத்து மக்களிடையேயும், இனங்களுக்கிடையேயும் இனமுறுகலை தோற்றுவிப்பதை முதலில் நிறுத்த வேண்டும். “சகோதர முஸ்ஸிம்களின் கையிலே நிருவாகமும், அரசியல் தலைமைத்துவமும் செல்லுமாயின் தமிழ் தலைமைகளும், தமிழர்களும் அடிமையாக செயற்பட வேண்டியேற்படும்” என்று தமிழர்களும், தமிழ்த்தலைமைகளும் ஒருநாளும் நினைக்கவும் மாட்டார்கள் அதேபோன்று இனவாதக் கருத்தை தெரிவிக்கவும் மாட்டார்கள். இதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அறிவுபூர்வமாக உணர்ந்து செயற்பட வேண்டும். தந்தை செல்வா காலத்தில் இருந்து வடகிழக்கில் தமிழ், முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் இணைந்து ஒரு சமூகமாக வாழ்ந்துள்ளார்கள். தமிழ், முஸ்லிம் உறவைப்பிரிக்க கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் குறுகிய சிந்தனையையும் இக்கருத்து மூலம் அறிய முடிகின்றது. இதனால் தமிழ்மக்களின் மனதை மாகாண சபை உறுப்பினர் புண்படுத்தியுள்ளார். இது கண்டிக்கத்தக்கதாகும் என்ற கருத்துக்கமைய இரு சமூகங்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென்ற கருத்தினை வலியுறுத்துவதாக அமைகின்றது.

சிறுபான்மைச் சமூகங்கள் ஒன்றிணைவதன் மூலமே வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமாகும். சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே கடந்த கால யுத்தங்களும் நடைபெற்றன. இவ்வாறான யுத்தத்தில் முஸ்லிம் இனத்தினைச் சேர்ந்த இளைஞர்களும் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் ஒருவர் ஆட்சி செய்யும் போது, அதன் கீழ் வாழ்வது அடிமையென நினைப்பது பொருத்தமானதா? அவ்வாறாயின் கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரை மூன்று இனங்களும் தனித்து நின்று ஆட்சி செய்ய முடியாது. அவ்வாறு ஓர் இனத்தினைச் சேர்ந்தவர் ஆட்சி செய்தால் மற்றவர்கள் அடிமை என எண்ணுவது என்பது இனங்களுக்கு இடையில் முரண்பாட்டினை ஏற்படுவத்துவதற்கான சந்தர்ப்பமாக மாறிவிடும்.

அதேபோன்று கிழக்கிலே திட்டமிட்ட காணி அபகரிப்பு இடம்பெறுகின்றது. இது தொடர்ந்தால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு இல்லை என்ற நிலை உருவாகும் என்ற கருத்தினை அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் குறிப்பிட்டிருந்தார். அதேபோல 1990ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை செய்யப்பட வேண்டும். என்ற கருத்தினை சிப்லிப் பாறுக் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு விசாரணை செய்வதாகவிருந்தால், பல தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களது நிலங்களும் அபகரிப்பு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான விடயங்களுக்கும் சர்வதேச விசாரணைகளை செய்யப்படவேண்டும். அவ்வாறு விசாரணைகள் செய்யப்படுகின்ற போது, இனரீதியான வன்முறைகள் மேலெழும்ப வித்திடுவதாக அமையலாம் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்திருந்தார்.

கடந்த யுத்த காலங்களிலே நடைபெற்ற படுகொலைகளுக்கு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறுவதற்கான சந்தர்ப்பத்தினை நல்லாட்சி உருவாக்கியிருக்கின்றது. அதேபோல எல்லா இனங்களும் ஒன்றுசேர்ந்து வாழ்வதற்கான சூழலாகவும் இதைப்பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பேசுவதற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பதாக பேசும்விடயங்கள், பேசும் ஒவ்வொரு சொற்கள் தொடர்பிலும் சமூகவலைத்தளங்களிலே அதிகம் பேசப்படுகின்றன, பகிரப்படுகின்றன. இதனால் ஒவ்வொருவரிடத்திலும் இலகுவில் இனவாதகருத்துக்களும் பரப்பிவிடப்படுகின்றன. அவ்வாறு தொடர்ச்சியாக இனவாத கருத்துகள் பேசப்பட்டுவந்தால் கிழக்கின் ஒற்றுமை சீர்குலைய வாய்ப்பேற்படும். ஆட்சியில் உள்ளவர்கள் நீதியாகவும், நேர்மையாகவும் செயற்படுகின்றபோது, எந்ததொரு சந்தர்ப்பத்திலும் பக்கச்சார்வுகள் இடம்பெற வாய்ப்பாகாது. அதேவேளை இனவாதகருத்துக்களை முன்வைக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பாடாது என்பதே நிதர்சனம். எனவே இதனை கிழக்கு மாகாண சபை ஆட்சியிலுள்ளவர்கள் எதிர்வரும் காலங்களிலாவது புரிந்துகொள்வார்களா என்பதை காலம்தான் உணர்த்த வேண்டும்.