தற்போதைய முதலமைச்சர் அடுத்த தடவை கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக வரமாட்டார்

கிழக்கு மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் அடுத்த தடவை கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக வரமாட்டார் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

.கோறளைப்பற்று மத்தி பலநோக்கு கூட்டுறவுச் சங்க அலுவலகக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வியாழக்கிழமை மாலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கிழக்கு முதலமைச்சர் தாம் செய்த அபிவிருத்தியை மேடையில் கோவையாக கொண்டு காட்டி அரசியல் செய்வது முதிர்ச்சியான அரசியல்வாதிக்கு கிடையாது.  அவைகளை பேசுவது என்றால் விவாத மேடையில் தான்.

இவ்வாறு நாங்கள் செய்த அபிவிருத்திகளை பட்டியல் இட்டு சொல்லப்போனால் கிழக்கு முதலமைச்சரால் எங்களை முந்த முடியாது. அவருடைய ஏறாவூர் பகுதிலே கடந்த காலத்தில் அரசியலுக்கு வருகின்ற பொழுது அவருடைய கட்சிக்கு எதிராக திள்ளு முள்ளு பேசி ஸ்ரீ லங்கா முஸ்;லிம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வழக்கு பேசியவர்.

கல்குடா பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஸ்ரீ லங்கா முஸ்;லிம் காங்கிரஸில் இருக்கின்ற தலைவர் ரவூப் ஹக்கிம் மற்றும் பசீர் சேகுதாவுத் இருவரும் தப்பாக பிறந்தவர்கள் என்று பேசினார். இதனை கல்குடா சமூகம் மறந்திருக்க முடியாது.

ஸ்ரீ லங்கா முஸ்;லிம் காங்கிரஸ் கட்சிக்கும் தலைமைக்கும் எதிராக நீதிமன்றம் சென்று இக்கட்சி எனக்கு வேணும் என்று சொன்னவர் இன்று பாதுகாவலன் என்ற அடிப்படையில் பேசுவதற்கு வெக்கம், ரோசம், மானம், மரியாதை இருக்கின்ற முதலமைச்சராக இருந்தால் இந்தப் பிரதேசத்திலே அந்த கோவையை உயர்த்திக் காட்டிப் பேசுகின்ற யோக்கியதை அற்றவராக இருக்க வேண்டியது என்னுடைய கருத்தாகும்.

அரசியலிலே கருத்து வேறுபாடுகள் அரசியல் காலத்தில் மாத்திரம் தான் இருக்க வேண்டும். தேர்தல் வருகின்ற பொழுது கருத்து முரண்பாடுகளை பேசிக் கொள்கின்றோம். தேர்தல் இல்லாத காலத்தில் சமூகத்திற்கு நல்ல தலைமைத்துவத்தை செய்கின்ற பண்பை கொண்டிருக்க வேண்டியவர்கள் மனநோயாளர்களாக போய் பேசுகின்றார்கள் என்றால் என்னிடத்தில் தருவதற்கு மருந்து கிடையாது.

கிழக்கு மாகாண சபை கலைத்து விட்டால் எனக்கு தொங்க கயிறு இல்லையே என்கின்ற பயம், அச்சம் அவரை அழுத்திக் கொண்டிருக்கின்றது. நாங்கள் ஆரம்பித்து வைத்த வேலைகளை திறந்து வைத்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

ஏறாவூரிலே பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹீர் மௌலான ஆரம்பித்து வைத்த நகர சபை கட்டுமானத்தை பிரதமரை கொண்டு வந்து திறக்கின்ற நிலைமை. இதை தெரிந்திருந்தால் பிரதமரும் வெட்கப்பட்டுப் போய் இருப்பார்.

இப்படிக் கட்டப்பட்ட விடயத்தை ஆரம்பித்தவர் உயிரோடு இருக்கும் பொழுது செய்கின்ற நிலவரத்துக்கு சொந்தக்காரரான முதலமைச்சர் எங்களுக்கு கோவைகளை காட்டி பேசுவதற்கு எந்த யோகிதையும் கிடையாது.

தேசிய ஊடகத்தில் கிழக்கு முதலமைச்சரை பகிரங்கமாக விவாதத்திற்கு அழைக்கின்றேன். நீங்கள் கடந்த காலங்களில் செய்த சில்மிசங்களை, அறுவருப்புக்களை தேசியத்திலே உங்களுக்கு சொல்லித் தரவேண்டி இருக்கின்றது.

கிழக்கு முதலமைச்சர் மாகாண சபை தேர்தலில் வெல்ல வேண்டும் என்று பிராத்திக்கின்றேன். ஏனெனில் அவர் எனது நல்ல நண்பர். ஆனால் எதிர்காலத்தில் முதலமைச்சர் பதவி அவருக்கு கிடையவே கிடையாது என்றார்.

கோறளைப்பற்று மத்தி பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் எம்.எப்.எம்.ஜௌபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.கனகசுந்தரம், மட்டக்களப்பு கூட்டுறவு தலைமையக உத்தியோகத்தர்களான கே.மகேஸ்வரன், எஸ்.எல்.ஏ.காதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட இருபது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கூட்டுறவுச் சங்க அலுவலகக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது.