அக்கினியில் 10008 அபூர்வ காயகல்லு மூலிகை இட்டு, மக்களுக்கு பிரசாதம் வழங்கி வேள்வி நிறைவு

(படுவான் பாலகன்) கிழக்கிலங்கையில், வரலாற்றுப் புகழ்பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில், 10,008 அபூர்வ காயகல்லு மூலிகைகளை அக்கினியில் இட்டு ஸ்ரீ ஸ்வர்ண கால பைரவ மகா வேள்வி இன்று(18) வெள்ளிக்கிழமை நடாத்தப்பட்டது.
வேள்வியின் இறுதியில், அகால மரணங்களால் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்காக சுடரேற்றப்பட்டதுடன், அக்கினியில் முன் இறந்தவர்களின் நாமம் கூறி அர்ச்சனை செய்யப்பட்டது.
உலகில் மூன்றாவது முறையாக இலங்கையில், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இவ்வேள்வி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கொல்லிமலை சித்தர் மஹா பைரவ உபாசகர் காகபுசுண்டர் தருமலிங்க சுவாமிகள் தலைமையிலுள்ள, மஹா அஸ்ட பைரவ உபாசகர்கள், யோகிகள், கேரள சாஸ்திர வேத விற்பன்னர்களான நம்பூதிரிகள், சித்தமுறைப்படி, இவ்வேள்வியை நடத்தினர்.
இவ் வேள்வியாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்ததுடன், கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன.