10008 அபூர்வ காயகல்லு மூலிகை கொண்டு நடாத்தப்படும் யாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

(படுவான் பாலகன்) வரலாற்றுப் புகழ்பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில், 10,008 அபூர்வ காயகல்லு மூலிகைகளைக்கொண்டு, நடாத்தப்படுகின்ற ஸ்ரீ ஸ்வர்ண கால பைரவ மாபெரும் வேள்வி இன்று(17) ஆரம்பமானது.

மஹா கணபதி கோமத்துடன் குறித்த வேள்வியானது ஆரம்பமானது.

இந்தியாவின் கொல்லிமலை சித்தர் மஹா பைரவ உபாசகர் காகபுசுண்டர் தருமலிங்க சுவாமிகள் தலைமையிலுள்ள, மஹா அஸ்ட பைரவ உபாசகர்கள், யோகிகள், கேரள சாஸ்திர வேத விற்பன்னர்களான நம்பூதிரிகள், சித்தமுறைப்படி, இவ்வேள்வியை நடத்தினர்.

இவ் வேள்வியாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்தனர்.

உலக சுபீட்சத்துக்காகவும் இலங்கைவாழ் மக்களுக்கு நல்லாசி வேண்டியும், நாட்டில் ஏற்பட்ட அகால மரணங்களால் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும், அவைகளால் நாட்டுக்கு ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காகவும், இலங்கையில் மிகப் பெரிய தெய்வீக அருளாட்சி மலர்ந்து, அனைவரும் சுபீட்சம் பெறும் நோக்கங்களுடன், இந்த மாபெரும் வேள்வி நடாத்தப்படுகின்றது.

நாளை(18) வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ ஸ்வர்ண கால பைரவ வேள்வி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.