கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் முற்றுகை வழக்கு 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விடுதிப்பிரச்சினை பற்றிய வழக்கினை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் எம்.ஐ.எம்.றிஷ்வி, விடுதிகள் தொடர்பில் களவிஜயம் மேற்கொண்டு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கும் நேற்று புதன்கிழமை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக்கட்டத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவரும் மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்றையதினம் புதன்கிழமை (16)பகல் நடைபெற்ற வேளை இந்த உத்தரவினை நீதவான் பிறப்பித்தார்.

இந்தப்பிரச்சினை தொடர்பான வழக்குக்கு திங்கட்கிழமை கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரி.ஜெயசிங்கம் நீதிமன்றில் ஆஜராகவேண்டும் என நீதவான் தெரிவித்திருந்தார். அதன்படி முடிவுக்கு வராத நிலையில் செவ்வாய்க்கிழமை உபவேந்தர் பேராசிரியர் ரி. ஜெயசிங்கத்தை நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்று நீதவான் அறிவித்திருந்தார்.

அதனையடுத்து செவ்வாய்க்கிழமை ஆஜரானபோது விசாரணை நடைபெற்றது. பின் புதன்கிழமை மீண்டும் நீதிமன்றத்துக்கு வருமாறு பணிக்கப்பட்டது. அதன்படி புதன்கிழமையான நேற்று இருபக்க கருத்துக்களையும் கேட்ட நீதவான் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப்பல்கலைக்கழகத்தின் முன்னால் கடந்த 08ஆம் திகதி மதிய வேளை சீசிரீவி கமராவை அகற்றவேண்டும், விடுதி வசதி வழங்கப்படவேண்டும், தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளுடன் மாணவர்கள் வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத் தொகுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இன்று வரைக்கும் அக்கட்டிடத் தொகுதியினுள்ளேயே இருந்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழக காவலாளிகளைத் தாக்கி அவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பத்தொன்பது பேருக்கு எதிராக எறாவூர் பொலிஸ் நிலையம் மூலம் வழக்குத் தொடரப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தினால் குறிப்பிடப்பட்டவர்கள் கடந்த 11ஆம் திகதி நீதிமன்றில் ஆஜரானதையடுத்து அவர்களுக்குப்பிணை வழங்கப்பட்டதுடன், முற்றுகையில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் அத்துடன், திங்கட்கிழமை (14) அன்று மட்டக்களப்பு நீதிமன்றுக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், மாணவர்களது கோரிக்கைகள் குறித்து, தற்போது வரை வெளியேறாத மாணவர்களமன்றில் ஆஜராகி தமக்கான பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து ஏனைய மாணவர்களுடன் கலந்துரையாடும் படியும் உபவேந்தர் நாளை செவ்வாய்க்கிழமை மன்றில் ஆஜராகவேண்டும் என்றும் நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
பின்னர் நேற்றைய தினமும் விசாரணைகள் நடைபெற்றன. இதன்போதே 2 வாரங்கள் வழக்கு பிற்போடப்பட்டதுடன், அறிக்கையும் கோரப்பட்டுள்ளது.