வகுப்புத்தடைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் மாத்திரமே எமது போராட்டங்களுக்கு கிடைத்தது – கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர்

நாங்கள் பல நியாயமான கோரி;க்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக முன்றலில் சத்தியாக்கிரகம் மற்றும் முற்றுகைப் போராட்டங்கள் மேற்கொள்கின்றோம் ஆனால் எமது போராட்டங்களுக்கு வகுப்புத் தடைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் மாத்திரமே கிடைக்கின்றதே தவிர அவற்றுக்கான தீர்வுகள் வழங்கப்படவில்லை என கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் இமல் துஷார நவரத்ன தெரிவித்தார்..
கிழக்குப் பலக்கலைக்கழக மாணவர்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்தை முற்றுகையிட்ட போராட்டத்திற்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் கிழக்குப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் எமது கோரிக்கைகள் தொடர்பாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம் ஆனால் எமது போராட்டத்திற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் எவ்வித தீர்வுமோ பதில்களுமோ வழங்கப்படாமையினாலேயே நாங்கள் தற்போது பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்தை முற்றுகையிட்டு எமது போராட்டத்தினைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். தற்போதுள்ள நிலையில் நாங்கள் இவ்வாறு நிர்வாகக் கட்டிடத்திற்குள் எமது போராட்டத்தை ஆரம்பித்து பல நாட்கள் கடந்துள்ள நிலையில் உபவேந்தர் அவர்களால் எமது கோரிக்கைகள் தொடர்பில் போராட்டங்களை வழிநடாத்திய பன்னிரண்டு மாணவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதே தவிர வேறு எவ்வித தீர்வு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன் எமது போராட்டங்களுக்கு முன்நின்று செயற்பட்ட பத்து மாணவர்களுக்கு வருட காலங்களுக்கு வகுப்புத் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
எமது இரண்டாம் வருட மாணவர்களை விடுதியில் இருந்து வெளியேறுமாறும் நிர்வாகத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளியேறாத மாணவர்களுக்கு பாட நிறுத்தம் மற்றும் பரீட்சைகள் நிறுத்தம் என்பனவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் அத்துடன் எமது மாணவர்களுக்கு எதிராக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற நடவடிக்ககளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே நாங்கள் தற்போது இவ்வடத்தில் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்கின்றோம்.
அத்தோடு பல்கலைக்கழக உபவேந்தரை நாங்கள் நிர்வாகக் கட்டிடத்திற்குள் தடுத்து வைத்திருக்கின்றோம் என்ற வகையில் ஊடகங்களுக்கு தவறான விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்படி எதுவும் இடம்பெறவில்லை. நாங்கள் இவ்விடத்திற்கு வந்தது எமக்கு விடுதி வசதியை பெற்றுத் தாருங்கள் எமது பரீட்சைகளை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் என்கின்ற கோரிக்கைளுடனேயே ஆனால் இதுவரைக்கும் இதற்காக எவ்வித தீர்வும் தருவதற்கு நிர்வாகம் தயாராக இல்லை.
அத்தோடு எமது கோரிக்கைகளின் நியாயத்தினை உணர்ந்து மட்டக்களப்பு சிவில் அமைப்புகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் போன்றன எமக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றமையை நாங்கள் இவ்வடத்தில் தெரிவித்தே ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.