வகுப்புக்கள் கருத்தரங்குகள் நடத்தப்படுவதற்கு; தடை

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையுடன் சம்பந்தப்பட்ட வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படுவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சை முடிவடையும் வரை செயலமர்வுகள், பிரத்தியேக வகுப்புக்கள், விசேட கலந்துரையாடல்கள் என்பனவற்றை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாதிரி வினாப்பத்திரங்கள் வழங்கப்படும் என்று பிரச்சாரம் செய்யும் சுவரொட்டிகள், பெனர்கள், துண்டுப் பிரசுரங்கள் என்பவற்றுக்கும் இவ்வாறான வினாப்பத்திரங்கள் தொடர்பாக ஊடகங்களில் விளம்பரப்படுத்துதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடு பூராகவும் அமைந்துள்ள மூவாயிரத்து 17 மத்திய நிலையங்களில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இரண்டு லட்சத்து 56 ஆயிரத்து 728 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவிருக்கிறார்கள்.
இந்த உத்தரவை மீறி செயற்படுவோர் பற்றி பொலிஸ் நிலையத்திற்கோ, பரீட்சைகள் திணைக்களத்திற்கோ முறைப்பாடு செய்யலாம். 119 அல்லது 1911 ஆகிய இலக்கங்கள் மூலமும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.