எதிர்ப்புக்களை எதிர்கொள்கிறார் வடக்கு முதலமைச்சர்

முன்­னாள் போரா­ளி­கள் தொடர்­பாக வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி. விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்த கருத்­துக்­குப் பல்­வேறு தரப்­புக்­க­ளி­ட­மி­ருந்­தும் எதிர்ப்­புக் கிளம்­பி­யுள்­ளது. கூட்­ட­மைப்­பின் ஒரு பங்­கா­ளிக் கட்­சி­யான ரெலோ அமைப்­பின் சார்­பில் இதற்கு உட­ன­டி­யா­கவே கண்­ட­னம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அமைப்­பின் செய­லா­ள­ரான ந.சிறி­காந்தா இது தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்ள செய்­திக்­கு­றிப்­பில், தமிழ் மக்­க­ளின் பேரா­த­ர­வு­டன் பத­விக்கு வந்த சி.வி.விக்­னேஸ்­வ­ரன், போரா­ளி­க­ளுக்கு எதி­ராக இவ்­வா­றான கரு­த்­துக்­க­ளைத் தெரி­வித்­துள்­ளமை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது எனத் தெரி­வித்­துள்­ளார். போர்ப்­ப­யிற்சி பெற்­ற­வர்­கள் வடக்­கில் குற்­றச் செயல்­க­ளில் ஈடு­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புள்­ளது என வடக்கு முத­ல­மைச்­சர் கூறி­யி­ருந்மை இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

முன்­னாள் போரா­ளி­கள் குறித்து
முத­ல­மைச்­ச­ரது
பொறுப்­பற்ற கருத்து

வடக்கு முத­ல­மைச்­ச­ரின் இந்­தப் பொறுப்­பற்ற, தான்­தோன்­றித்­த­ன­மான கருத்­துக்­களை எவ­ருமே ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டார்­கள். போர் இடம்­பெற்­ற­போது கொழும்­பில் பாது­காப்­பு­டன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்­த­வர் சி.வி. விக்­னேஸ் வரன்.

போரின் கொடு­மை­யை­யும், மக்­கள் அனு­ப­வித்த அவ­லங்­க­ளை­யும் அறிந்­தி­ராத அவர் போன்­ற­வர்­கள், எது­வித சிர­ம­மும் இல்­லாது பத­விச் சுகத்தை அனு­ப­வித்­துக் கொண்டு, வாய்க்கு வந்­ததை எல்­லாம் கூறு­வது நியா­ய­மும் அல்ல; தர்­ம­மும் அல்ல. முன்­னாள் போரா­ளி­கள் தமது இனத்­துக்­கா­கவே போரா­டி­ய­வர்­கள். தமது குடும்­பம், சுக­துக்­கங் கள் சக­ல­தை­யும் துறந்து கள­மா­டி­ய­வர்­கள்.

இவர்­க­ளில் பல ஆயி­ரக் கணக்­கா­ன­வர்­கள் தமது இன்­னு­யிர்­க­ளைத் தியா­கம் செய்­தி­ருக்­கின்­ற­னர். ஏரா­ள­மா­ன­வர்­கள் அங்­கங்­களை இழந்­துள்­ள­னர். பலர் தமது ஒட்­டு­மொத்­தக் குடும்­பங்­க­ளை­யும் இழந்­துள்­ள­னர். இறு­திப் போரின் பின்­னர், புனர்­வாழ்வு நட­வ­டிக்­கைக்­குள் உள்­வாங்­கப்­பட்ட இவர்­க­ளில் ஒரு தரப்­பி­னர் தமது குடும்­பங்­க­ளு­டன் இணைந்து வாழ்­கின்­ற­னர்.

பொரு­ளா­தார ரீதி­யில் பெரும் பின்­ன­டை­வைச் சந்­தித்து வரும் இவர்­கள், அதைச் சீர் செய்­வ­தற்­கா­கப் போராடி வரு­கின்­ற­னர். இந்த நிலை­யில் வடக்கு முத­ல­மைச்­சர் இவர்­கள் தொடர்­பா­கத் தெரி­வித்த கருத்து இவர்­களை மன­த­ள­வில் பெரி­தும் பாதித்து விட்­டது.

இளை­ஞர்­க­ளின் ஆயு­தப் போராட்­டம் கார­ண­மா­கவே, 1987 ஆம் ஆண்டு இந்­திய-இலங்கை ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. இதன் மூல­மா­கவே அர­ச­மைப்­பில் 13 ஆவது திருத்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டது. இதன் பய­னாக உரு­வா­கி­யது தான் மாகாண சபை­கள். ஆரம்­பத்­தில் வடக்­கும், கிழக்­கும் இணைந்த வகை­யில் மாகா­ண­சபை ஒன்று உரு­வாக்­கப்­பட்­டது.

ஆனால் இதைக்­கூட இன­வா­தி­கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. இத­னால் வடக்­கும் கிழக்­கும் துண்­டா­டப்­பட்­டன. கிழக்­கில் மாகா­ண­ச­பைக்­கான தேர்­தல் தனி­யாக இடம்­பெற்­றது. ஆனால் வடக்­கில் இடம்­பெ­ற­வில்லை. பல்­வேறு தரப்­பி­ன­ரின் அழுத்­தங்­க­ளைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு செப்­ரம்­பர் மாதம் வடக்கு மாகா­ண­ச­பைக்­கான தேர்­தல் இடம்­பெற்­றது.

தேர்­தல் இடம்­பெ­றும்­வரை கொழும்­பு­வா­சி­யாக வாழ்ந்த சி.வி.விக்­னேஸ்­வ­ரன் வடக்கை எட்­டிப்­பார்த்­தார். தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டங்­க­ளில் கலந்து கொண்­டார். மாகா­ண­ச­பை­யில் தமக்கு மூன்­றில் இரண்டு பங்கு ஆத­ரவு கிடைத்­தால் வடக்கு ஆளு­நரை உட­ன­டி­யா­கவே அகற்றி விடு­வ­தா­கச் சூளு­ரைத்­தார். மக்­க­ளும் அவ­ரது பேச்­சில் மயங்­கி­னார்­கள்.

இவர்­தான் முத­ல­மைச்­சர் பத­விக்கு மிகப் பொருத்­த­மா­ன­வர் எனத் தீர்­மா­னித்து அமோக ஆத­ர­வை­யும் வழங்­கி­னர். ஆனால் இவர் முத­ல­மைச்­ச­ரின் கதி­ரை­யில் அமர்ந்­த­தைத் தவிர, வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளில் எதை­யுமே நிறை­வேற்­ற­வில்லை. பின்­னர் மாகா­ண­ ச­பை­யி­லும், அதற்கு அப்­பா­லும் இடம்­பெற்ற விட­யங்­கள் அனை­வ­ரும் அறிந்­த­து­தான்.

தமிழ் மக்­க­ளது ஆத­ரவு தற்­போ­தும்
தமக்­குண்டு என்ற முத­ல­மைச்­ச­ரது
தப்­புக்­க­ணக்கு

நான் எவ­ருக்­குமே அஞ்­ச­மாட்­டேன், மக்­க­ளின் பலம் எனக்­குத்­தான் உள்­ளது. என்­றெல்­லாம் கர்ச்­சித்­த­வர்­தான் இவர். கூட்­ட­மைப்­பின் தலை­மை­யைக்கூட ஒரு பொருட்­டாக இவர் கரு­த­வில்லை. மாற்­றுத் தலைமை என்ற கன­வில் இவர் மூழ்­கி­யி­ருந்­தார் ஆனால் தற்­போது அந்­தக் கன­வும் கலைந்­து­விட்­டது.

கூட்­ட­மைப்­புக்கு நான் விரோ­தி­யல்ல; கூட்­ட­மைப்­பி­லேயே நான் உள்­ளேன், என்­றெல்­லாம் சுருதி கலைந்து இவ­ரது குரல் ஒலிக்­கத் தொடங்­கி­விட்­டது. மக்­கள் இவ­ரது உண்­மைத் தன்­மையை மெல்ல மெல்ல உணர்ந்து கொண்டுள்­ள­னர். கூட்­ட­மைப்­புக்கு விரோ­த­மா­ன­வர்­க­ளி­டம் இவர் கொண்­டுள்ள உற­வை­யும் புரிந்து கொண்­டுள்­ள­னர். இவ­ரது பிரித்­தா­ளும் தந்­தி­ர­மும் தற்­போது அம்­ப­லத்­துக்கு வந்­துள்­ளது.

மக்­க­ளுக்­குப் பதில் கூறவேண்டிய
கடப்பாடு முதலமைச்சருக்கு உண்டு

மாகாண அமைச்­சுக்­கள் மீது விசா­ரணை இடம்­பெ­று­மா­னால், அதில் முத­ல­மைச்­ச­ரின் வச­முள்ள அமைச்­சுக்­க­ளும் உள்­ள­டக்­கப்­ப­டு­தல் வேண்­டும். ஆனால் முத­ல­மைச்­சர் இதற்கு இணங்கத் தயாரில்லை. இதற்­கான கார­ணம் என்ன? மக்­க­ளால் முத­ல­மைச்­ச­ரின் கதி­ரை­யில் அமர்த்தி வைக்­கப்­பட்ட சி.வி. விக்­னேஸ்­வ­ரன் தமது எண்­ணம் போன்று எதை­யுமே செய்­து­விட முடி­யாது.

மக்­க­ளுக்­குப் பதில் சொல்­லித்­தான் ஆக வேண்­டும். ஆனால் முத­ல­மைச்­சரோ மாகாண சபை­யில் தாமே எல்­லா­மும் என்­பது போன்று அதி­கா­ரத் திமி­ரு­டன் நடந்து கொள்­கி­றார். இதை எந்த வகை­யி­லும் ஏற்­றுக் கொள்­ள­மு­டி­யாது.
தற்­போது போரா­ளி­கள் தொடர்­பாக அவர் தெரி­வித்­துள்ள கருத்­துக்­கள் மிக­வும் பார­தூ­ர­மா­னவை.

தமிழ் மக்­க­ளின் உணர்­வு­க­ளுக்கு எதி­ரா­னவை. குறிப்­பாக முன்­னாள் போரா­ளி­க­ளின் எதிர்­கா­லத்­தைப் பாதிக்­கக் கூடி­யவை. ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் சிறி­காந்தா கூறி­யது போன்று, சாமா­னி­யர் ஒரு­வர் இத்தகைய கருத்­தைக் கூறி­யி­ ருந்­தால், பொறுத்­துக் கொள்ள முடி­யும். ஆனால், பொறுப்­புள்ள பத­வி­யில் அமர்ந்­துள்ள சி.வி.விக்­னேஸ் வரன் கூறி­யதை ஏற்­றுக் கொள்­ளவே முடி­யாது.

இது குளத்­தைக் கலக்கி மீன்­க­ளைக் பலி கொடுக்கும் செய­லுக்கு ஒப்­பா­னது. முன்­னாள் போரா­ளி­க­ளின் வாழ்க்­கை­யு­டன் விளை­யா­டு­ வ­தற்கு எவ­ருக்­குமே அரு­கதை கிடை­யாது. ஏனென்­றால் அனு­ப­விக்க வேண்­டிய துன்­பங்­க­ளை­யெல்­லாம் அனு­ப­வித்­த­வர்­கள் அவர்­கள்.

மேலும் பொலிஸ்மா அதி­ப­ரின் கூற்­றுக்கு வலுச் சேர்க்­கும் வகை­யில் வடக்கு முத­ல­மைச்­சர் கருத்து வெளி­யிட்­டதை எந்த வகை­யி­லும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது . சி.வி.விக்­னேஸ்­வ­ரன் இனி­யா­வது பொறுப்­பு­டன் செயற்­ப­டு­வ­தற்கு முன்­வர வேண்­டும். கடந்த காலத் தவ­று­களை அவர் மீண்­டும் விடுவா ராயின், தமிழ் மக்­கள் அவரை மன்­னிக்­கவே மாட்­டார்­கள்.