கி.ப. கழக உபவேந்தர் பேராசிரியர் ரி.ஜெயசிங்கம் மட்டு.நீதிமன்றில் ஆஜராகிறார்.

மட்டக்களப்பு- வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக்கட்டத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவரும் மாணவர்களின் பிரச்சினை முடிவுக்கு வராத நிலையில் உபவேந்தர் பேராசிரியர் ரி. ஜெயசிங்கத்தை நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்று இன்றைய  தினம்(14) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 08ஆம் திகதி மதிய வேளை சீசிரீவி கமராவை அகற்றவேண்டும், விடுதி வசதி வழங்கப்படவேண்டும், தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளுடன் மாணவர்கள் வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத் தொகுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இன்று வரைக்கும் அக்கட்டிடத் தொகுதியினுள்ளேயே இருந்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழக காவலாளிகளைத் தாக்கி அவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
மேற்படி சம்பவங்கள் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பத்தொன்பது பேருக்கு எதிராக எறாவூர் பொலிஸ் நிலையம் மூலம் வழக்குத் தொடரப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தினால் குறிப்பிடப்பட்டவர்கள் கடந்த 11ஆம் திகதி நீதிமன்றில் ஆஜரானதையடுத்து அவர்களுக்குப்பிணை வழங்கப்பட்டதுடன், முற்றுகையில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் அத்துடன், திங்கட்கிழமை (14) அன்று மட்டக்களப்பு நீதிமன்றுக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், மாணவர்களது கோரிக்கைகள் குறித்து, தற்போது வரை வெளியேறாத மாணவர்கள், இன்றைய தினம் மன்றில் ஆஜராகி தமக்கான பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து ஏனைய மாணவர்களுடன் கலந்துரையாடும் படியும் உபவேந்தர் நாளை செவ்வாய்க்கிழமை மன்றில் ஆஜராகவேண்டும் என்றும் நீதவான் உத்தரவு பிறப்பித்தள்ளார்.
மாணவர்கள் நியாயமற்ற கோரிக்கைகளுடனேயே ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்கின்றனர் பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடம் மற்றும் இறுதி வருட மாணவர்களுக்கு மாத்திரமே விடுதி வசதி மேற்கொள்ளப்படுகின்றது. ஏனையோர் பல்கலைக்கழகத்தின் வெளியேதங்குமிடங்களை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கான செலவீனங்களை பல்கலைக்கழகம் பொறுப்பேற்கும்.
தற்போது சென்ற வருடம் முதல் வருட மாணவர்களாக இருப்பவர்கள் தற்போது இரண்டாம் வருடத்திற்கு சென்றமையால் அவர்கள் பல்கலைக்கழகத்தின் வெளியே சென்று விடுதி வசதி தேட வேண்டும் அப்போது தான் இவ்வரும் இறுதி வருட மாணவர்களுக்கான விடுதி வசதி ஒழுங்குகளை மேற்கொள்ள முடியும் அதற்காகவே இரண்டாம் வகுப்பு மாணவர்களை விடுதியில் இருந்து வெளியேற கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன் நியாயமற்ற முறையில் எந்த மாணவர்களுக்கும் வகுப்புத் தடை விதிக்கப்படவில்லை அவர்களின் மேல் காணப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகள் அதிகமானதன் காரணமாகவே இவ்வாறான வகுப்புதடைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் மாணவர்கள் இவ்விடயத்தை கருத்திற் கொள்ளாது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர் என்றும் பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி ஆர்ப்பாட்டம் காரணமாக மாணவர்கள் நிர்வாகக் கட்டிடத் தொகுதியை விட்டு வெளியேறும் வரை தாங்களும் வெளியேறுவதில்லை எனக்கூறி கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரி.ஜெயசிங்கம், பிரதி உபவேந்தர் கலாநிதி கே.ஈ.கருணாகரன் உடபட நிர்வாகத் தரப்பினர் சிலர் பல்கலைக்கழத்தினுள்ளேயே கடந்த 8ஆம் திகதி முதல் தங்கியிருந்தனர். ஆனால், 11ஆம் திகதி நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து மாணவர்கள் வெளியேறாத நிலையிலும் அங்கிருந்து வெளியேறினர்.
இதற்கிடையில் மட்டக்களப்பு லேடி மனிங் வீதியிலுள்ள உபவேந்தரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நிருவாகத்தினருடன் கலந்துரையாடல்களை உபவேந்தர் நடத்தி வருவதாகவும் தெரிகிறது.
இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு அருகிலுள்ள சில் கபே யில் ஊடக சந்திப்பொன்றினை நடத்தி, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமையின் காரணத்தாலேயே, ஜனநாயகப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழக சகல மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சிரீனத் லியனாராச்சி தலைமையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
அச்சந்திப்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக சகல மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சிரீனத் லியனாராச்சி, 5 கோரிக்கைகளை முன்வைத்து, கிழக்குப் பல்கலைக்கழக சகல மாணவர் ஒன்றியத்தால் பேராட்டத்தில் ஈடுபடப்படுகின்றது.
பட்டபடிப்புக்கான சான்றிதழைத் தாமதிக்காமல் வழங்க வேண்டும், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவைத் தாமதியாமல் கொடுக்க வேண்டும், மாணவர்களுக்கான விடுதி வசதிகள் வழங்கப்படல் வேண்டும், சி.சி.டி.வி கமெராக்களை அகற்ற வேண்டும், இடை நிறுத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக பல்லைக்ககழத்தில் அனுமதிக்க வேண்டும் ஆகியவையே எமது கோரிக்கைகளாகும். எமது இந்தக் கோரிக்கைகள் நியாயமானதாகும். இவற்றுக்காக நாம் போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.
கிழக்கு பலக்லைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்படுமென, எமக்கு வழங்கப்பட்ட உத்தரவாதம், மீறப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திலிருந்து 50 மாணவர்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை, உடனடியாக மீண்டும் பல்கலைக்கழகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் நாளை நீதிமன்றுக்கு ஆஜராவாரா, இல்லையா என்பது நாளை பகலுக்குப்பின்னர்தான் தெரியும். இருந்தாலும் அவ்வாறு ஆஜராகினாலும், நீதிமன்றத்தின் அறிவித்தல் எவ்வாறிருக்கும் என்பதனையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.