மட்டக்களப்பில் நடைபெறும், நடைபெறவிருக்கும் பாலம் , வீதி தொடர்பான அபிவிருத்தியும் நாமும்! பா.உ சதாசிவம் வியாழேந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தசாப்த காலத்திற்கு மேல் யுத்தம் நடைபெற்ற   பகுதிகள் குறிப்பாக படுவான்கரைப் பகுதிகளாக  இருக்கின்றன. இந்தப்பகுதிகளை உள்ளடக்கியுள்ள அதிகளவிலான கிராம வீதிகள்,பாலங்கள் பாதிப்படைந்துள்ளது. அது மாத்திரம் அல்ல பல்வேறு பட்ட கிராமங்களை இணைக்கின்ற பாலங்கள் இன்னும் அமைக்கப்படாமல் உள்ளன. இதனால் மக்கள் நீர்நிலைகளைக் கடப்பதற்கு ஆபத்தான வழிகளை பயன்படுத்துகின்றனர்.

கடந்த காலங்களில் தங்கள் உயிரையும் விட்டுள்ளனர். 2015ம் ஆண்டு 9 மாதம் 03ம் திகதியில் இருந்தே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இராணமடு -மலயர்கட்டு, நரிப்புல்தோட்டம் – பன்குடாவெளி, சந்திவெளி – திகிலிவட்டை, கிண்ணையடி – முருக்கன்தீவு, மண்டூர், அம்பிளாந்துறை, காஞ்சிரங்குடா போன்ற  அமைக்கப்பட வேண்டிய பாலங்கள்  தொடர்பாக  பாராளுமன்றத்தில் அதிகளவில் நான் பேசியுள்ளேன்.

வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களிப்பதாக இருந்தால் தீர்வுத்திட்டம் என்ற விடயத்துடன் எமது வடகிழக்குப் பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் நாங்கள் பேசியிருந்தோம்.

இது தொடர்பாக ஜனாதிபதியோடு, பிரதமரோடும் மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சுக்களுடனும் பேசியிருந்தோம். 2015ம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின்போது நாங்கள் பேசியதிற்கு அமைவாக கிராமி வீதிகளை அபிவிருத்தி செய்வோம் என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் 60 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் மணல் வீதிகளாக இருந்த வீதிகளை நாங்கள் தார் வீதிகளாக மாற்றியுள்ளோம்.

அத்தோடு முடிந்து விடாமல் தொடர்ந்தும் 2016ம் ஆண்டு நான் கிராமங்களுக்கிடையிலான புதிய பாலங்கள் அமைப்பது தொடர்பாகவும், வீதிகள் புணரமைப்பது தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைச்சிடமும் அமைச்சின் செயலாளர்களிடமும் பல தடவை அவர்களது அலுவலகங்களுக்கு சென்று பேசி இருக்கின்றேன்.

இது தொடர்பாக நான் பாராளுமன்றத்தில் பேசும்போது அப்போது நிதியமைச்சராக இருந்த ரவிக்கருணாநாயக்க, நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல ஆகியோர் இந்தப் பாலங்களை அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வாக்குறுதி தந்திருந்தார்கள்.  எனவே இந்த வாக்குறுதிகளுக்கு அமைவாக புதிய பாலங்கள் அமைப்பதற்கான இடங்களை தெரிவு செய்து அதற்கான திட்ட முன்னறிக்கையினை இவர்களிடம் கையளித்திருந்தேன்.

அத்தோடு எனக்கு கிடைத்த கிராமிய வீதிகளை புணரமைப்பு செய்யும் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பாலங்களுக்கு அண்மித்த பகுதிகளில் காணப்பட்ட வீதிகளை தார்வீதிகளாக மாற்றினேன். குறிப்பாக கிரானிற்கு அண்மையில் உள்ள குமாரத்தன் ஆலய வீதி, நரிப்புல் தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள பன்குடாவெளி வீதியினை அபிவிருத்தி செய்துள்ளேன். காரணம் இப் பாலங்கள் அமைப்பதற்கு முன்னர் வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

அதன் அடிப்படையிலேயே எனக்கு கிடைத்த நிதிமூலம் இவ் வீதிகளை சுமார் மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட தொகையில் புணரமைப்பு செய்தேன்.  அத்தோடு நரிப்புல்தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள விவசாய வீதியினை புணரமைப்பு செய்வதற்கான திட்டமுன்னறிக்கையினை நெடுஞ்சாலைகள் அமைச்சிடம் தற்போது கையளித்து அதற்கான அனுமதியினையும் பெற்றுள்ளேன்.

2016ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்திற்கு வாக்களிப்பதற்கு முன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,  எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் ஐயா அவர்களுடன் வடகிழக்கை சேர்ந்த அனைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து எமது பகுதிகளின் அபிவிருத்தி, தீர்வுத்திட்டம் தொடர்பாகவும் வரவுசெலவுத்திட்டத்திற்கு வாக்களிப்பதற்கு முன்னர் பேச வேண்டும் என்று கூறியதற்கமைய அதற்காக கூட்டம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்குள் ஒழுங்கு செய்யப்பட்டது.

இது தொடர்பாக நாங்கள் அவர்களுடன் பேசும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் புணரமைக்கப்பட வேண்டியுள்ள வீதிகள், அமைக்கப்பட வேண்டியுள்ள பாலங்கள், எமது மக்களது வாழ்வாராதத்தினை உயர்த்துவதற்கான தொழிற்சாலைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக பேசியதோடு கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு போன்ற பகுதிகளில் செய்யப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பான திட்ட முன்னறிக்கையினை வழங்கியிருந்தேன்.

தற்போது அதற்கான பலன் கிடைத்திருக்கின்றது. தற்போது என்னால் முன்மொழியப்பட்ட திட்டங்களுக்காக 8000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவ் வேலைத்திட்டங்கள் ஆனது 2015,2016 வரவு செயவுத்திட்டங்களுக்கு வாக்களிப்பதற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாகவே முன்னேடுக்கப்படுகின்றன.

இத் திட்டங்கள் ஒரு சில அரசியல் வாதிகளாலோ அல்லது ஒரு சில அரச அதிகாரிகளாலோ கிடைக்கப்பட்ட திட்டங்கள் அல்ல.

மாறாக இதற்கு ஒட்டுமொத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் முயற்சியே காரணம். இது தொடர்பாக நான் பாராளுமன்றத்தில் அதிக தடவை பேசியுள்ளேன். அது மாத்திரம் அல்ல எமது மாவட்டத்தில் காணப்படும்  வாழைச்சேனை தேசிய கடதாசிச்சாலை தொடர்பாக இதுவரை பாராளுமன்றத்தில்  பத்துத் தடவைகளுக்கு மேல் பேசியுள்ளேன். இது சம்மந்தப்பட்ட அமைச்சரான ரிசாட் பதியுதீன் அவர்களுடன் கடதாசிச்சாலை தொடர்பாக பேசுவதற்கு அவரின் அலுவலகத்திற்கு இதுவரை எழு தடவைகளுக்கு மேல் சென்றுள்ளேன்.

இது தொடர்பாக பல வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேசியுள்ளேன். இதன் பலனாக  இன்று இக் கடதாசித்தொழிற்சாலை புணரமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் பல இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கிடைக்கும்.

பொதுவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நான் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகும் ஒருவர் .எப்போதும் எங்கும் கத்தித்திரியும் ஒருவர் என்று விமர்சிக்கப்படுபவன். நான் பாராளுமன்றத்திலும், வெளியிலும் கத்தியதால்தான் இன்று அதற்கான பலன்கிடைத்திருக்கின்றது. வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளித்ததாலும் தொடர்ந்தும் நான் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகள் தொர்பாக பாராளுமன்றத்தில் பேசிக்கொண்டிருப்பதாலும் இவ் அபிவிருத்திப்பணிகள் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இதை எமது மக்களுக்கு கிடைத் வெற்றியாகப் பார்க்கின்றேன். தற்போது இப் பாலங்கள், வீதிகள் தொடர்பான விடயத்தில் அமைச்சின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ் அபிவிருத்திப்பணிகள் முடிவடையும் வரை தொடர்ச்சியாக பாராளுமன்றதினுள்ளும் வெளியிலும் சம்மந்தப்பட்ட அமைச்சிக்களுடனும், ஜனாதிபதி மற்றும் பிரதமருடனும் இது தொடர்பிலான அழுத்தங்களை நான் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.