மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலங்கள் அமைத்தல் தொடர்பான வெளிப்படுத்துகை.ஞா.ஸ்ரீநேசன் M.P

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலங்கள் அமைத்தல் தொடர்பான வெளிப்படுத்துகை என்ற தலைப்பில்  மாவட்டத்தில் விரைவில் நிர்மானிக்கப்படவுள்ள பாலங்களுக்கான நிதி எவ்வாறு யாருடைய முயற்சியின் பயனாக பெறப்பட்டது என்ற விபரங்களை உள்ளடக்கி  ஞா.ஸ்ரீநேசன் (பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு)    அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில்  நடைபெறுகின்ற போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக  நான் உரையாற்றியிருந்தேன். அதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை மற்றும் எழுவான்கரை பிரதேசங்களை இணைப்பதற்கான பாலங்கள் அமைப்பது தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தேன். றாணமடு – மாலயர்கட்டு, நரிப்புல்தோட்டம் – பங்குடாவெளி, சந்திவெளி – திகிலிவட்டை, கிண்ணையடி – முருக்கன்தீவு மற்றும் கிரான், மண்டூர் அம்பிளாந்துறை, காஞ்சிரங்குடா போன்ற பாலங்கள் அமைக்கப்படுவதன் அவசியம் தொடர்பாகவே குறிப்பிட்டிருந்தேன். அதற்கு பதிலளிக்கும் போது நிதியமைச்சர் கௌரவ.ரவி கருணாநாயக்க அவர்கள் 2016 ஆம் ஆண்டில் 04 பாலங்களையும் பின்னர் 2017 களில் ஏனைய பாலங்களையும் அமைத்துத்தருவதாக உறுதியளித்திருந்தார். பின்னர் உடனடியாக பாலங்களுக்கான திட்ட முன் மொழிவுகள் நிதி அமைச்சுக்கு என்னால் சமர்ப்பிக்கப்பட்டன. திட்ட முன்மொழிவுகள் கிடைக்கப் பெற்றமைக்கான கடிதமும் அப்போதய நிதி அமைச்சரினால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரான கௌரவ. லக்~;மன் கிரியல்ல மற்றும்  நெடுஞ்சாலைகள் தவிசாளர் திரு.சூரியராச்சி அவர்களுடனும் கலந்துரையாடிய போது நிதிப்பற்றாக்குறை இருப்பதால் 2017 ஆம் ஆண்டில் இப்பாலங்கள் அமைக்க நிதி ஏற்பாடு செய்ய முடியும் என கூறினர். மேலும் எனது வேண்டுகோளுக்கிணங்க திரு.சூரியராச்சி அவர்கள் பாலங்களின் மதிப்பீடுகளைச் செய்வதற்காகவும் சாத்தியவள ஆய்வுகளை செய்வதற்காகவும்  திட்டப் பொறியியலாளர்களை 03 தடவைகள் மட்டக்களப்புக்கு அனுப்பி வைத்திருந்தார்;. அவர்களை உரிய பாலங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்களுக்கு; அழைத்துச் சென்று காண்பித்தேன். அதற்கான மதிப்பீடுகளும் செய்யப்பட்டிருந்தன. மேலும் தேசிய இனநல்லிணக்க அமைச்சின் செயலாளர்  திரு.சிவஞானசோதி அவர்களைச் சந்தித்து நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப் படாமல் இருக்கும் படுவான்கரை பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவும் மக்களின் பிரயாணங்களை இலகு படுத்தவும் மேற்படி பாலங்களை அமைத்தலை விரைவுபடுத்தலின் அவசியம் தொடர்பாக பல தடவைகள் கலந்துரையாடினேன். இந்நிலையில் அவ்விடயங்கள் வெற்றியளித்துள்ளதாகவும், பாலங்கள் கூடிய விரைவில் அமைக்கப்படவுள்ளதாகவும் திரு.சிவஞானசோதி அவர்கள் எனக்கு கூறியிருந்தார். இதுவே உண்மையான விடயமாகும்.

குறிப்பாக ஒரு விடயத்தினைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். ஒரு முன்மொழிவு பின்வரும் வழிகளிற்றான் நடைபெறுகின்றது.
பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது முன்மொழிவு முன்வைக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களால் விவாதிக்கப்படுதல், அதனை நிதியமைச்சு ஏற்றுக்கொள்ளுதல், அமைச்சரவைக்கு அவ்விடயங்களை செயலாளர்கள் சமர்ப்பித்தல், அமைச்சரவையில் நிறைவேற்றப்படுதல், மாவட்டச் செயலாளர்களின் ஊடாக அமுல்படுத்தப்படுதல் இதுவே நடைமுறை இதுவே உண்மையான நடைமுறையாகும்.
இதனை விடுத்து மாவட்ட நிருவாகி நேரடியாக பாராளுமன்றத்திலோ, அமைச்சரவையிலோ இத்திட்டங்களை விவாதித்து கொண்டு வரமுடியாது. அது பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் பொறுப்புகளேயாகும்.

இவற்றையெல்லாம் மாவட்ட நிருவாகி நிறைவேற்றியதாகக் கூறுவது பொருத்தமற்ற விடயமாகும். அப்படியென்றால் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எதற்காக என்ற கேள்வி எழுகின்றது. எனவே உண்மைக்கு மாறானதைக் கூறமுனைவது சிறுபிள்ளைத் தனமானதாகும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.