நிருவாக கட்டடத்தைவிட்டு மாணவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்

கிழக்குப் பல்கலைக் கழக வந்தாமூலை வளாக நிருவாக கட்டடத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன் இன்று (11) வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்..

கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் ஐந்து அம்ச கோரிக்கை முன்வைத்து 63 வது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் செவ்வாய்கிழமை (08) பிற்பகல் மாணவர்களால் நிருவாகக் கட்டடம் முற்றுகையிடப்பட்டது.

இதன்காரணமாக பல்கலைக் கழகத்தின் நிருவாக நடவடிக்கைள் முற்றாக தடைப்பட்டதுடன் நிருவாக நடவடிக்கை மேற்கொள்வதற்கான சூழல் இல்லையென கல்விசாரா ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாணவர்கள் நிருவாகக் கட்டத்தை முற்றுகையிட்டு நிருவாக நடவடிக்கைளுக்கு இடையூறு விளைவிப்பதாக இதற்று தலைமை தாங்கும் 19 மாணவர்களுக்கு எதிராக ஏறாவூர்ப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்து.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (11) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பிவைத்தது.

இதனடிப்படையில் குறித்த வழக்குக்கினை விசாரணை செய்த பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன் மாணவர்கள் நிருவாகக் கட்டடத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.