கிழக்கில் சகல ஆசிரியர் இடமாற்றங்களும் நிறுத்தப்பட்டுள்ளன’

கிழக்கு மாகாணத்தில் சகல ஆசிரியர் இடமாற்றங்களும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளனவென, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் அறிவித்துள்ளார்.

இதற்கான பணிப்புரையை, சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களும் அவர் வழங்கியுள்ளார்.

மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் தற்காலிக இடமாற்றங்கள் என அனைத்து ஆசிரியர் இடமாற்றங்களும் இவ்வாறு மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும், மருத்துவக் காரணங்கள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்படும் இடமாற்றங்கள் தொடர்பில், அதற்கான நியாயமான காரணங்களுடன், மாகாண கல்வியமைச்சருக்கு, மாகாண கல்விப் பணிப்பாளர் ஊடாக அனுமதி பெற்ற பின்னர் அந்த இடமாற்றத்தை மேற்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆசிரிய இடமாற்றங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்துக்குச் சென்று அதிகாரிகளை, ஆசிரியர்கள் சந்திப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் மாகாண கல்விப் பணிப்பாளர், ஆசிரியர்களைக் கேட்டுகொண்டுள்ளார்.

வலய மட்டங்களில் ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதால் பாடசாலைகளின் செயற்பாடுகளில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.