அரையூர் அருளுக்கு தமிழிலக்கிய விருது.

(படுவான் பாலகன்)ஆரையூர் அருள் எனும் புனைப்பெயருடன் 11வயதில் கலைத்துறைக்குள் நுழைந்த மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில், ஆரையம்பதியில் வசிக்கும் மூத்ததம்பி அருளம்பலம் கூத்து, நாடகம், இலக்கியம் மற்றும் கிராமிய கலைகளில் சிறப்புற்று விளங்கும் கலைஞனாவார்.

 
சிறுகதை, கட்டுரை, வில்லுப்பாட்டு, நாடகங்கள், நாட்டுக்கூத்து போன்றவற்றினை எழுதுவதில் ஆர்வம்கொண்ட இவரின், எழுத்துக்களுக்கு சஞ்சிகைகள், பத்திரிகைகள் இடம்கொடுத்துள்ளன. இதனால் இவர் எழுதிய படைப்புக்கள் பல வெளிவந்துள்ளன.

 
1949.09.19ம் திகதி பிறந்த இவர், ஆரம்பகல்வியை ஆரைப்பற்றை இராமகிருஸ்ணமிசன் தமிழ் கலவன் பாடசாலையிலும், உயர்தரத்தினை கல்லடி சிவானந்த தேசிய பாடசாலையிலும் கல்வி கற்று, பின்னர் அதிபராக சேவையாற்றி ஓய்வுநிலையடைந்திருக்கின்ற இவர், 2001ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டு வரை பலநூல்களையும் பதிப்பித்துள்ளார்.

 
2001ம் ஆண்டு பேச்சியம்பாள் பாடல்கள் என்ற நூலை பதிப்பித்த இவர், 2002ம் ஆண்டு புதுக்குடியிருப்பு கற்பரசி கண்ணகையம்பாள் பாடல்கள், 2006ம் ஆண்டு புன்னச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்பாள் பாடல்கள், 2010ம் ஆண்டு கல்லடி உப்போடை ஸ்ரீ சித்திவிநாயகர் பேச்சியம்பாள் பாடல்கள், ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் ஸ்தாபகர் ஓங்காரானந்தஜீசரிதம், 2012ம் ஆண்டு பேச்சியம்பாள் அவதாரமும் ஆலயமும், 2013ம் ஆண்டு கிராமத்து உள்ளங்கள், 2016ம் ஆண்டு இறையின்பப் பாவாரம் போன்ற பல நூல்களையும் பதிப்பித்துள்ளார்.

 


கூத்துக்கலைஞனாக, அண்ணாவியாராக, எழுத்தாளனாக பல்வேறு பணிகளை முன்னெடுத்துச்செல்லும் இவர், பல விருதுகளுக்கும், பட்டங்களுக்கும் சொந்தக்காரராக திகழ்கின்றார். 1997ம் ஆண்டு கூத்து கலைன் என்ற விருதினைப்பெற்ற இவர், அண்ணாவியார், நாட்டுக்கூத்து கலைஞன், சமாதானநீதவான், கீர்த்தி சிறி தேசிய விருது, கலைஞர் கௌரவ விருது, கலைஞானி, கலாபூசணம், முதலமைச்சர்; விருது, இறைஞானதேசிகர், சாதனையாளர், இறைக்கவிமாமணி, கலைச்செம்மல், கவியரசர், பல்கலைமாமணி, திறமைக்கான தேடல் விருது, சமூகதீபம், கலைமாமணி, செம்மொழிப் புலவர் போன்றவற்றினை பெற்ற இவருக்கு, கிழக்கு மாகாண கலை, கலாசார பண்பாட்டு திணைக்களம் அண்மையில். தமிழ் இலக்கிய விருதினை வழங்கி கௌரவித்தனர்.