பல்லாயிரக்கணக்கான மக்களின் கவனத்தினை ஈர்ந்த வீதி

(படுவான் பாலகன்) தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய இறுதித்திருவிழா நேற்று(06) ஞாயிற்றுக்கிழமையும், தீர்த்தோற்சவம் இன்று(07) திங்கட்கிழமை காலைவேளையிலும் இடம்பெற்றது. இதை காண்பதற்காகவும், முருகப்பெருமானை வழிபடுவதற்காகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகைதந்தனர். குறித்த மக்களின் நாவிலிருந்து மாவடிமுன்மாரி சந்தியிலிருந்து, தாந்தாமலை வரையான வீதியின் சாகாசங்கள் பற்றிய வார்த்தைகளே வெளிவந்தன.
குறிப்பாக, ஏன் இவ்வீதி கவனப்பாரற்றுயிருக்கின்றது? தமிழ் பிரதேசங்கள் என்ற ரீதியில் புறக்கணிக்கப்படுகின்றதா? இங்குள்ள சமூகத்தினை ஏமாற்ற முயற்சிக்கின்றனரா? பல்லாயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து செய்கின்ற இவ்வீதி, அரசியல்வாதிகளினதும், உயரதிகாரிகளினதும் கண்களுக்கு தெரிவதில்லையா? எங்களை போன்று உழவு இயந்திரத்திலும், மோட்டார்சைக்கிளிலும் உயரதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இவ்வீதியால் போக்குவரத்து செய்வார்களா? வீட்டிலிருந்து வரும் போது எவ்வாறு வந்தோம் இப்போது கிறவல் நிறத்தில் இருக்கின்றோம்! இது தெரியுமா? இன்று அல்ல நேற்று அல்ல பல வருடங்களாக கூறிவருகின்றோம்! இவ்விடயம் கேட்கவில்லையா? ஓரே இடங்களில் பல அபிவிருத்திகளை செய்கின்றனர். ஆனால் ஏன் இந்தபிரதேசங்களில் இவ்வாறான செயற்பாடுகளை செய்கின்றார்கள் இல்லை? இவ்வீதியால் பயணிப்பவர்கள் மனிதர்கள் இல்லையா? போன்ற பல வினாக்களின் மூலமாக வார்த்தைகளை கொட்டித்தீர்த்தனர்.
பேரூந்து, உழவு இயந்திரம், முச்சக்கரவண்டி போன்ற பல வாகனங்கள் இங்கு, சேவையில் ஈடுபட்டிருந்தன. இதன்போது அதிகமாக உழவு இயந்திரங்களில் மக்கள் ஆலய உற்;சவத்திற்கு வருகைதந்திருந்த நிலையில், உழவு இயந்திரத்திலிருந்து இறங்கியவர்கள் அனைவரும் கண்களை கசக்கிகொண்டு இறக்கியமையை காணமுடிந்தது. கிறவல் வீதியென்பதினால் கிறவல் தூசிகள் கண்களுக்குள்ளும், உடலங்கங்களுக்குள்ளும் ஒட்டிக்கொண்டதனால் இந்நிலையேற்பட்டதாகவும் அம்மக்கள் குறிப்பிட்டனர்.

இவ்வீதி தொடர்பில், பல தடவைகள் குறிப்பிட்டும், கிறவல்கள் மண்ணாக சென்றுகொண்டிருக்கின்றதே தவிர, காப்பட் வீதிகளாக மாறவில்லை. இவ்வாறான இவ்வீதியினை புனரமைப்பு செய்து, வழங்குமாறு இம்மக்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுகிக்கின்றனர்.