கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுதூபியின் புனரமைப்பு பணி ஆரம்பம்.

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலைப் பகுதியில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவு தூபியின் புனரமைப்பு பணி இன்று(06) ஆரம்பமானது.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் தலைமையிலும், அவரது செலவிலும் குறித்த புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொக்கட்டிச்சோலைப் பகுதியில், 1987ம் ஆண்டு தொடக்கம் 1991ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொல்லப்பட்ட 185பொதுமக்களின் நினைவாகவும் இத்தூபி அமைக்கப்பட்ட்டது. இதில் 1987ம் ஆண்டு ஜனவரி 28ம் திகதி நடைபெற்ற இறால்வளர்ப்பு படுகொலையில் 86பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த நினைவுதூபியில், நினைவுதின நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், 2006ம் ஆண்டு இறுதிப்பகுதியிலும் 2007ம் ஆண்டு முதற்பகுதியிலும் நடைபெற்ற யுத்தம் காரணமாக, குறித்த நினைவுதூபி தேசமாக்கப்பட்டது.

2007ம் ஆண்டு மக்கள் மீண்டும் தமது பிரதேசங்களில் குடியேறியதனை தொடர்ந்து, கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டாலும், தூபி புனரமைப்பு செய்யப்படாமால், நிகழ்வுகளுக்காக அப்பகுதி துப்பரவு செய்யப்பட்டு வந்த நிலையில், பத்து வருடங்களின் பின், தற்போது புனரமைப்பு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.