கலைப்பொருட்களும் சமூகநீதியும் -கலாநிதி சி. ஜெயசங்கர்

கலைப்பொருட்கள் அழகுணர்வூட்டுபவை. உணர்வுபூர்வமானவை. நினைவுகளைக் கிளர்த்தும் வல்லமைமிக்கவை. எனினும் அவை கேள்விக் குரியவையும் கூட  கலைப் பொருட்களை வடிவமைக்கும் மனிதர்களின் வாழ்வு எந்தளவிற்கு அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொண்டவையாக இருக்கின்றன. அவர்களது உழைப்பிற்கும், படைப்பாக்கத் திறனுக்கும் கிடைக்கின்ற பெறுமதி எதுவாக இருக்கின்றது என்பது கவனத்திற் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

தேர்,தமிழர்களின் கலைவாண்மைக்குப் பெயர் பெற்றது. தேரைஅதன் அழகுப் பெறுமானம் கொண்டு சித்திரத் தேர் என்றும் அழைக்கின்றோம்.

ஆயினும் தேரைத் தொடமுடியாத, தேர் வடத்தைத் தொட்டிழுக்க முடியாத தமிழர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தேரைக் கலைப்பொருளாக ஆக்கி பண்பாட்டுப் பரவலாக்கம் செய்யும் முன்னெடுப்பில்;தேர் எதன் சின்னமாக இருந்து வருகின்றது என்பது பற்றிய உரையாடலும் முக்கியமானதாகும்.

அவ்வாறுதான் கொழுந்துபறிக்கும் பெண்களின் அழகுபொம்மைகள் தேயிலைத் தோட்ட விற்பனை நிலையங்களிலும் காட்சியறைகளிலும் விற்பனைக்கும் அழகுபடுத்தலுக்கும்  உரியதாக ஆக்கப்பட்டிருக்கிறது.

கொழுந்துபறிக்கும் பெண்களதுபடிமங்கள் தேயிலைத் தொழிலாளர்களின் குறியீடாகவும் பரவலடைந்திருக்கின்றது. புகைப்படம், ஓவியம், சினிமா, இலக்கியமென எல்லாவழிகளும் கொழுந்து பறிக்கும் பெண்களையே பதிவு செய்கின்றன. இப்பதிவு கொழுந்து பறிக்கும் பெண்களது கடுமையான சூழ்நிலைகளிலான உழைப்பையும் அவர்கள் மீதான சுரண்டலையும் வெளிப்படுத்துகின்றதா அல்லது பசுமையான மலைச்சரிவுகளில் வண்ண வண்ணக் கோலங்களிலான புறத் தோற்றப்பாடுகளைப் பதிவுசெய்கின்றதா என்பது கருத்திற் கொள்ளப்படவேண்டியது.

கலைப்பொருட்கள் வழி நிகழ்த்தப்படும் பண்பாட்டுப் பரவலாக்கம் சமூகநீதியுடன் கூடியதா என்றகேள்வி இங்கு அடிப்படையானதாகின்றது.

கலாநிதிசி. ஜெயசங்கர்