முனைமண் வாரிசுக்கு கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருது

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, முனைக்காடு கிராமத்தில் பிறந்து, வசித்துக்கொண்டிருக்கின்ற மகேந்திரன் கேதீஸ்வரன், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இளம் கலைஞர் விருதினை இவ்வருடம் பெற்றுகொண்டார்.
கலைமானி  பட்டதாரியான கேதீஸ்வரன், தனது பதினான்கு வயதிலே கலைக்குள் நுழைந்து, பாரம்பரிய கலைகளில் பாத்திரமேற்றும், அவற்றினை பழக்கியும் அரங்கேற்றி வருகின்ற கலைஞனாகவும், அண்ணாவியாராகவும் செயற்படுகின்றார்.

பதினான்கு வயதிலே கூத்துக்கலைக்குள் கால்பதித்த இவர், 2003ம் ஆண்டு கும்பகர்ணண் வதை எனும் கூத்தின் மூலமாக அறிமுகமாகி, அரிச்சந்திர மயாணகாண்டம், ஜராசந்திரன் போர், நல்லதங்காள், பகாசூரன், அலங்காரரூபன், பவளக்கொடி, நச்சுப்பொய்கை, அபிமன்னன் சண்டை, வள்ளியம்மன் நாடகம் போன்ற கூத்துக்களில் பாத்திரமேற்று ஆடியிருக்கின்றார். அதேபோல நிர்முகன் சண்டை, நல்லதங்காள், கும்பகர்ணன் வதை, அரிச்சந்திர மயாண காண்டம், நந்தியின் மகிமை, கண்டிராசன், தக்கயாகம் போன்ற கூத்துக்களை பாடசாலை மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பழக்கி அரங்கேற்றியும் இருக்கின்றார். அத்தோடு அண்ணாவியாராகவும் செயற்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கூத்துக்கள் ஆடுவது, பழக்குவதோடு நின்றுவிடாமல் கூத்துக்களை எழுதுவதிலும் ஆர்வம் செலுத்தி, நந்தியின் மகிமை, கண்கண்டதேவர், கல்விக்கனி, மனிதன் இருக்கான், மனிசி எங்கே, உழவர்பெருமை, மதுவின் கொடுமை போன்ற கூத்துக்களை எழுதியும் உள்ளார்.  கூத்துக்களோடு மட்டுமின்றி வில்லுப்பாட்டு, காவடி நடனப்பாடல் போன்ற பாடல்களையும் எழுதியுள்ளதோடு இறைதொண்டிலும் கவனத்தைச்சார்ந்து பஜனைப்பாடல்களை பாடுதலுடன் பஜனை பாடல்களை எழுதியும், அவை பஜனை பாமாலை என்ற புத்தகமாக 2016ம் ஆண்டு நாகசக்தி கலை மன்றத்தினால் வெளியீடு செய்யப்பட்டது. மேலும் வசந்தன், கும்மி போன்றவற்றினை பழக்கி அவற்றினை அரங்கேற்றியும் உள்ளார்.
கூத்து, நாடகம், வசந்தம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பிரதேச, மாவட்ட, மாகாண மட்டங்களில் முதலிடங்களை பெற்றுள்ளார். குறிப்பாக பாடசாலை ரீதியாக நடாத்தப்பட்ட தமிழ்தினப்போட்டி, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகள், எழுவானில் கலைவிழா, கலைஇலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம், பிரதேச கலாசார விழா போன்றவற்றில் பங்கேற்று பல சான்றிதழ்களுக்கு சொந்தக்காரராகவும் திகழ்கின்றார்.
1989ம் ஆண்டு பிறந்து, இன்றுவரை பல நாடகங்களிலும் நடிகராக செயற்பட்டிருக்கின்ற கேதீஸ்வரன், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்தின் வருகைதரு விரிவுரையாளராகவும் கடமையாற்றிருக்கின்றார். மேலும் கூத்து பயிற்சி பட்டறை வளவாளராகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதிகமாக கலைப்பயணத்தில் ஈடுபாடுகொண்;ட இவர், ஆன்மீகப்பணி, சமூகப்பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றார். இளம்வயதினிலே சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற இவரது கலைச்செயற்பாட்டினை கௌரவித்து 2013ம் ஆண்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இளம்கலைஞர் விருதினை வழங்கி கௌரவித்தனர். இவ்வாறான செயற்பாட்டினை கௌரவிக்கும் வகையில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இவ்வருடம் அண்மையில் கல்முனையில் நடாத்திய தமிழ் இலக்கிய விழாவில் இளம்கலைஞர் விருதினை வழங்கி கௌரவித்தனர்.