ஸ்ரீ திரௌபதி அம்மன் வருடாந்த தீப்பள்ளைய சடங்கு

மட்டக்களப்பு நகரத்தின் தென்புறத்தே அமைந்திருக்கும் பசுமை அரங்கமாகத் திகழும் படுவான்கரைப் பிரதேசமான போரதீவுப்பற்றின் திருப்பழுகாமம் என்னும் பழம்தமிழ் பதியினிலே கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ திரௌபதி அம்மன் வருடாந்த தீப்பள்ளைய சடங்கு இன்று ஆரம்பமாகின்றது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள  திரௌபதி அம்மன் ஆலயங்களில் மிகவும் பழமைவாய்ந்த ஆலயமாகும்  அந்தவகையில் கஜபாகு மன்னன் காலத்துடன் தொடர்புபட்ட ஆலயமாக பழுகாமம் திரௌபதை அம்மன் ஆலயம் அமையப்பபெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. பண்டு தொட்ட பாரம்பரியங்களையும், மகாபாரத நிகழ்வுகளையும் சித்திரிக்கின்ற வகையில் இவ்வாலயச்சடங்கு விழா பன்னெடுங்காலமாக பக்தி பூர்வமாக நடைபெறுவது வழமை. அதன் அடிப்படையில் பெண்மை காத்த பெரும் சக்திக்கு பள்ளையச் சடங்கு இம்முறையும் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
     இவ்வாலயத்தில் நடைபெறும் சடங்குகள் அனைத்தும் ஆகம முறைசாரதாக கிராமிய தெய்வ வழிபாட்டின் மரபுகளை அடிப்படையாகக் கொண்டே  நடைபெற்று வருகின்றது. சடங்குகளை மேற் கொள்ளும் பூசாரியார் நம்பியார் என அழைக்கப்படுகின்றார். இவ்வாலயத்தில் தேவாதிகள் ஆடி அருள்வாக்கு செல்வதும் வழமையாகவுள்ளது. அது மாத்தரமின்றி மகா பாரதக் கதையை சித்தரிக்கும் வகையில் வீமன், அருச்சுனன், சகாதேவன், நகுலன, கடோற்கயன், அரவான், போன்றோரும் தேவாதிகளாகவுள்ளமை இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும்.
     மேற் கூறியது போன்று இங்கு இடம்பெறும் விசேட சடங்கு நிகழ்வுகள் மகாபாரத கதையை சித்தரிக்கும் வகையில் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் அதன் முதல் நிகழ்வாக வனவாசத்தின் போது தம்மாருக்கு விலங்குகளினால் ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக தருமர் வீமனிடம் சக்தி வாய்ந்த தனது வாளை கொடுப்பதை சித்தரிக்கும் வகையில் தருமர் வீமனுக்கு வாள் மாற்றுதலும், இரண்டாவது நிகழ்வாக  பஞ்சபாண்டவர் நாட்டை வீட்டு காட்டில் வசித்துவரும் போது வீமனின் தலைமையில் உணவு தேடிச் செல்வதை சித்ரிக்கும் வகையில் வனவாசமும், மூன்றாவது நிகழ்வாக மகாபாரத போரை அருச்சுன் வெல்வதற்காக சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரத்தை பெறுவதற்காக தவம் இருந்தமையை சித்தரிக்கும் வகையில் அருச்சுனன் பாசுபதம் பெறுவதற்கு தவநிலை ஏறுதலும் நடைபெறுகின்றது. இதனைவிட நகுலன் கொடியெடுத்தல், (தீகட்டை எடுத்துவருதல்), தீ மூட்டுதல், கடல் குளித்தல், தீ மிதிப்பு போன்ற விசேட நிகழ்வுகள் இடம்பெறும் தீயை மந்திர உச்சாடனத்தின் மூலம் கட்டுப்படுத்தாமை மிகவும் சிறப்பம்சமாக அமைக்கின்றது.
    இந் நிகழ்வுகளில் மிகவும் பக்தி பூர்வமானதும், சக்திவாய்ந்த நிகழ்வாக வனவாச நிகழ்வினை பக்கதர்கள் கொள்கின்றனர். இதன் போது தேவாதிகளாக வீமன், அருச்சுனன், சகாதேவன், அவர்களுடன் கொலுவும் தேவாதிமார், ஆகியோர் ஊரைச்சுற்றி உணவுதேடி ஊர்வலம் இவ் ஊர்வலத்தின் போது பக்தர்கள் நிறைகுடம் வைத்து வரவேற்பர். இதன்போது தேவாதிகள் பக்கதர்களின் குறைகளை அறிந்து அருள்வாக்கு செல்வது மிகவும் பக்தி பூர்வமான அமைகின்றது. இதன் போது வீமன் தங்களுக்கு தேவையான பழங்களை  வீடுகளில் பெற்றுக் கொள்வார். தங்கள் வீடுகளில் இருந்து வீமன் பழம் பெறுவதை  பக்தர்கள் பெரும் பாக்கியமாக பக்தர்கள் கருதுகின்றனர்.
   வெள்ளிக் கிழமை(04.08.2017)  ஆலய நம்பியாரை அழைத்துவருதலுடன் திருக்கதவு திறப்புவிழா நடைபெறும், 05.08.2017 திகதி சனிக்கிழமை 06.08.2017 திகதி ஞாயிற்றுக்கிழமை, 07.08.2017 திகதி திங்கட் கிழமை, 08.08.2017 திகதி செவ்வாய்கிழமை, ஆகிய தினங்களில் திருச்சடங்கு பக்தி பூர்வமாக நடைபெற்று 09.08.2017 திகதி புதன் கிழமை வீமனுக்கு வாழ்மறுத்தல், வனவாச நிகழ்வு என்பன நடைபெறும். 10.08.2017 திகதி வியாழக்கிழமை நகுலன் கொடி எடுத்துவருதல், அருச்சுனன் தவநிலை ஏறுதல், 11.08.2017 திகதி வெள்ளிக்கிழமை தீக்கட்டை எடுத்துவருதல், தீமூட்டுதல், கடல் குளித்தல் நடைபெற்று பிற்பகல் தீமித்தல் இடம் பெறும் 12.08.2017 திகதி  சனிக்கிழமை தீக்குளிக்கு பால் ஊற்றுதல், வைரவர் பூஜை நம்பியாரை வீட்;டுக்கு அழைத்து செல்லுதலுடன் அம்பாளின் தீப்பள்ளைய சடங்கு இனிதே நிறைவு பெறவுள்ளது. அனைத்து பக்தர்களும் திருவிழாக்காலங்களில் வருகை தந்து அம்பாளின் அருளைப்பெற்றேகுமாறு ஆலய வண்ணக்கு சபையினர் அனைத்து பக்தர்களையும் வேண்டி நிற்கின்றனர்.
சு.கமலேஸ்வரன்