பன்முக நிதியை சுதந்திரமாக பகிர்ந்தளிக்க முடியாத நிலையில் பொன்சேகாவின் நடவடிக்கை – யோகேஸ்வரன் எம்.பி

எங்களது பன்முக நிதியை சுதந்திரமாக மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாத நிலையில் தேசிய கொள்ளைகள் பிராந்திய அமைச்சர் சரத் பொன்சேகாவின் நடவடிக்கை காணப்படுகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை நாசிவந்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா வித்தியாலய அதிபர் ரீ.ஜெயப்பிரதீபன் தலைமையில் நடைபெற்ற நேற்று மாலை போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.

பாராளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கிடைக்கப்பட்ட சுற்று நிருபத்திற்கமைய பாடசாலைகளுக்கு எந்த பொருட்களும் வழங்க முடியாது. தேசிய கொள்ளைகள் அமைச்சின் பன்முகப்படுத்தப்பட்ட வேலைத் திட்டத்தை பிராந்திய அமைச்சராக இருக்கின்ற சரத் பொன்சேகாவிடம் கையளித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முக நிதிகளை வழங்குவது கூட இராணுவம் போன்றுதான் செயற்படுகின்றார். எங்களது பன்முக நிதியை சுதந்திரமாக மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாத நிலையில் தேசிய கொள்ளைகள் பிராந்திய அமைச்சர் சரத் பொன்சேகாவின் நடவடிக்கை காணப்படுகின்றது.

இந்த வருடம் பாடசாலைகளுக்கு போடப்பட்ட பன்முக நிதிகள் அனைத்தும் திரும்பப்பட்டுள்ளது. பாடசாலை சமூகத்திடம் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் மோசமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற பௌத்த தர்மத்திற்கு எதிராக இயங்கிக் கொண்டிருக்கின்ற மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி என்ற போலி வேடம் பூண்டுள்ள போலி வேடதாரி வாழைச்சேனை மீறாவோடை பாடசாலை காணி விடய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இனமுறுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டிருக்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இஸ்லாமிய மற்றும் தமிழ் மக்களுக்கு ஏதும் பிரச்சனைகள் இருக்கலாம். அவ்வாறு இருந்தால் நாங்கள் பேசித் தீர்ப்போம். மூன்றாவது நபர் வந்து ஆராய வேண்டிய அவசியம் இல்லை.

இவ்விடயத்தில் மக்கள் பிரதிநிதிகள் எந்த கரிசனையும் காட்டவில்லை என்று தெரிவித்ததோடு, மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் முடிவுற்று வரும் போது எங்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்தார். இக்காணி பிரச்சனை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகவே நாங்கள் அறிந்து கொண்டோம் எவரும் எங்களுக்கு தகவல்களை வழங்கவில்லை.

இப்பிரச்சனை தொடர்பாக முதலில் வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். பொலிஸ் முறைப்பாடு செய்திருக்க வேண்டும். அவர்கள் நடவடிக்கை எடுக்காவிடின் மக்கள் பிரதிநிதிகள் கவனத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டும். பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு வருகின்றார்கள் அங்கு யாரும் இவ்வியடம் தொடர்பில் தெரிவிக்கவில்லை. கூறியிருந்தால் நாங்கள் இதனை இலகுவாக தீர்த்து வைத்திருப்போம்.

எங்களுக்கு யாருக்கும் தெரியாமல் பூதாகரமாக நடவடிக்கையை செய்திருப்பதை நாங்கள் எற்க முடியாது. அதையிட்டு நாங்கள் பெரும் கவலை அடைந்திருக்கின்றோம். நாங்கள் எமது மக்கள் விடயத்தில் கவனமாக நிருவாகம் நடாத்தி வருகின்றோம்.

மக்களுக்கு ஏதும் பிரச்சனை ஏற்படடின் எங்கள் கவனத்திற்கு கொண்டு வாருங்கள் இயன்றவரை நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். வாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க விடாமல் தடுத்து மூடினார்கள். இதற்காக பிரதமர் அலுவலகம் சென்று நடவடிக்கை மேற்கொண்டு தற்போது ஆலையை இயங்குவதற்கு ஒரு சாத்தியம் உருவாகிவிட்டது.

எமது மக்களின் சுயதொழிலை வளம்படுத்திக் கொள்வதற்காக பல தொழில் பேட்டைகளை கிராமம் கிராமமாக அமைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்கள் வறுமையில் குறைந்திருக்கின்றது. தமிழ் பிரதேசம் வறுமையில் மேலோங்கிக் கொண்டு செல்கின்றது. காரணம் என்னவென்று பார்த்தோமா அங்கு அமைச்சர்கள் அபிவிருத்தி செய்வதால் வறுமை குறைந்து விடுமா இல்லை.

இஸ்லாமிய மக்கள் மத்தியில் இரண்டு விடயங்கள் முக்கிய இடம்பெறுகின்றது. இப்பகுதியில் மதுபானசாலைகள் இல்லை, மதுபானம் பாவனையாளர்கள் மிகக் குறைவு, உழைக்கும் நிதி சரியாக வாழ்வதாரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது.

பெரும்பாலானவர்கள் சுயதொழிலிலே தங்களுடைய வாழ்வதாரத்தை நடாத்தி வருகின்றார்கள். ஆனால் நம்மவர்கள் இலவசமாக தருவார்களா என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். சுயமாக உழைப்பது குறைவாக காணப்படுவதால் வாழ்வதாரத்தில் தமிழ் பிரதேசம் பின் தள்ளிய நிலையில் காணப்படுகின்றது. இதில் நீங்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

1983ம் ஆண்டு யூலைக் கலவரத்தில் பெருந்தொகையான தமிழ் மக்கள் அழிக்கப்பட்டார்கள், இடம்பெயர்ந்தார்கள். ஆனால் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார் யூலைக் கலவரத்தில் ஏழு தமிழர்கள் மாத்திரம் கொல்லப்பட்டார்கள், நூற்றுக்கு மேற்பட்டோரே இடம்பெயர்ந்தார்கள் என்று முழு பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கும் பொய்யை கூறியிருக்கின்றார்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இருப்பவர்கள் கூறும் முழுப் பொய்யை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். யூலைக் கலவரத்தில் நூற்றுக்கு மேற்பட்டோரே இடம்பெயர்ந்தவர்கள் என்றால் வாழைச்சேனை கண்ணகிபுரம், மரப்பாலம். புல்லுமலை, சின்னப்புல்லுமலை, கரடியனாறு உட்பட்ட பல பகுதிகளில் மலையகத்தை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் குடியமர்ந்தார்களே எதற்காக வந்தார்கள் யூலைக் கலவரத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட அநீதியால் வந்தார்கள்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் பொய்களை கூறி வருவதை நாங்கள் ஏற்க முடியாது. இன்னும் சிலகாலம் சென்றால் கடந்த 2009 திட்டமிட்ட கொடிய யுத்தத்தில் பத்து தமிழர்கள் இறந்திருப்பார்கள் என்று கூறுவார்கள். இவ்வாறு முழுப் பொய்யை சொல்லமாட்டார்கள் என்று நல்லாட்சி அமைச்சர்களை கூறமாட்டேன். அதிலே பொய் சொல்லி பலக்கப்பட்டவர்கள்.

இந்த நல்லாட்சி அரசில் நீதி, நியாயம், தர்மம் இருக்க வேண்டும். இந்த நாடு பௌத்த நாடு என்றால் அதிலே இவை போதிக்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் கருத்துக்களை கூற வேண்டும். யார் குற்றம் இழைத்தாலும், யார் அநீதி இழைத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மன்பாங்கு வேண்டும்.

அநீதி மற்றும் கொலைகள் இடம்பெற்றிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அவரை திருத்த வேண்டும். இதுதான் நல்லவர்களின், நியாயத்தை, தர்மத்தை மதிப்பவர்களின், நீதியாக வாழ்பவரின் கடமையாகும்.

அதை விடுத்து எங்களது பாதுகாப்பு தரப்பு ஒரு அநீதியும் செய்யவில்லை என்று மிகவும் பொய்யைக் கூறுகின்ற பிரதிநிதிகள் பௌத்தர்கள் என்று தங்களைக் கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

யாழ்ப்பாணத்தில் நாகர் ஆட்சியில் இருந்த தமிழர்கள் குலோதரன், மகோதரன் என்பவர்கள் தனது பாட்டனாரின் மாணிக்க ஆசனத்திற்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இரண்டாவது தடவையாக இலங்கைக்கு வந்த கௌதம புத்தர் அவர்களை சமாதானப்படுத்தி மாணிக்க ஆசனத்தை இருவர் விரும்பும் அளவிற்கு அவ்வாறு சமாதானப்படுத்தியவர் என்று மகாவம்சம் கூறுகின்றது.

அவ்வாறு மகாவம்சத்தை ஏற்றுக் கொள்ளும் பௌத்தர்கள் சமாதானத்திற்கு எதிராக அனைத்து விடயங்களின் பௌத்த மதகுமார்கள் சிலரும், பௌத்தர்களும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

இந்த நாடு பௌத்த நாடு என்று நாங்கள் எப்போதும் ஏற்க மாட்டோம். இது பூர்வீக தமிழ் நாடு இன்று அவர்கள் பௌத்த நாடு என்று சொல்லிவிட்டு ஏனையவர்களை சிறுபான்மையினர் என்று கூறி அவர்களின் அடிப்படை உரிமையில் கை வைக்கின்றார்கள்.

சிறுபான்மை இனம் என்று ஒன்று இல்லை. தமிழ் தேசிய இனம், இஸ்லாமிய தேசிய இனம். இது இந்த நாட்டின் தேசிய இனங்கள். எங்களுக்கு மத ரீதியாக சம அந்தஸ்தை அனைத்து இன மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ஒரு மதத்திற்கு மாத்திரம் உயர் அதிகாரங்களை வழங்குவதை நான் எதிர்க்கின்றோம். அதிக மக்களை கொண்ட மதம் என்ற அடிப்படையில் சில சலுகைகளை வழங்குங்கள்.

வடக்கு கிழக்கில் எங்கும் மதஸ்தலங்களை நிறுவலாம் என்று கருதுவதும் தவறாகும். சமாதானத்திற்கு ஒரு போதும் வழிவகுக்காது என்றும், யூலைக் கலவரம் சார்பாக மிகவும் பொய்யான தகவலை வெளியிட்ட அமைச்சருக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றேன் என்றார்.