சட்டத்தில் மாத்திரமே தமிழ்மொழிக்கு உரிமை

அரச அலுவலகங்களுடன் பொதுமக்கள் கடிதப் பரிமாற்றம் மேற்கொள்ளல் மற்றும் ஆவணப் பிரதிகளின் பொழிப்புகளைப் பெற்றுக்கொள்ளல், மொழிபெயர்ப்பைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பாக அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விதிகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். நாட்டின் தேசிய மற்றும் அரச கரும மொழிகளாகச் சிங்களமும் தமிழும் உள்ளதுடன் தொடர்பு மொழியாக ஆங்கிலமும் உள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களின் முதன்மை நிர்வாக மொழியாகத் தமிழும் ஏனைய ஏழு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழியாகச் சிங்களமும் உள்ளதுடன் நாற்பத்தொரு பிரதேச செயலகப் பிரிவுகள் இரு மொழி அதாவது தமிழும் சிங்களமும் நிர்வாக உரிமையுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளாகவுள்ளன.

முதன்மை நிர்வாக மொழிகளாகவுள்ள மாகாணங்களில் அம்மொழியில் பொதுமக்கள் தமது அன்றாடக் கடமைகளையும், அரசாங்கத் தொடர்புகளையும் அம்மொழியில் ஆற்றிக்கொள்ள முடியும். அதேபோன்று இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளில் அவ்விரு மொழிகளிலும் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

ஆனால், பல இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளில் அரசின் மொழிக்கொள்கை உரியபடி நடைமுறைப்படுத்தப்படுவதில் பிரச்சினையுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மொழியுரிமை சட்டத்தில் உண்டு. நடைமுறையில் இல்லையென்ற குறை காணப்படுகின்றது. அக்குறை தீர வழிகாணப்பட வேண்டும்.

சிங்கள மொழியை முதன்மை நிர்வாக மொழியாகப் பயன்படுத்தும் ஏதாவது ஒரு இடப்பரப்பில் எவராவது ஒருவருக்குத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அரச அலுவலகமொன்றுடன் தொடர்பு கொள்வதற்கும், தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழை முதன்மை நிர்வாக மொழியாகக் கொண்ட இடப்பரப்பில் சிங்களத்திலோ, ஆங்கிலத்திலோ தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் உரிமையுண்டு.

எவராவது அலுவலக முறையான இடாப்பை பதிவேட்டை, வெளியீட்டை அல்லது ஆவணத்தை பரிசீலிப்பதற்கோ அல்லது பொழிப்புகளை எடுப்பதற்கோ அவருக்குள்ள உரிமையைச் சட்டம் ஏற்றுக்கொண்டால் குறித்த முதன்மை நிர்வாக மொழிக்குப் புறம்பாக மற்றைய நிர்வாக மொழியிலோ அல்லது தொடர்பு மொழியான ஆங்கிலத்திலோ குறித்த இடாப்பு, பதிவேடு, வெளியீடு, ஆவணத்தின் பிரதியையோ, பொழிப்பையோ பெற்றுக்கொள்ளவும் தேவைக்கேற்ப அவற்றின் மொழிபெயர்ப்பையோ பெற்றுக்கொள்ளவும் முடியும்.

அரசியலமைப்பின் 16 ஆவது திருத்தத்தின் 22/2 இன் கீழ் இவ்வுரிமை வழங்கப்பட்டுள்ளது. குறித்த 16 ஆவது திருத்தத்தின் 22/3 ஆம் உறுப்புரையும் இதை வெளிப்படுத்துகின்றது. இதனடிப்படையில் ஒருவர், அவர் தமிழரோ. சிங்களவரோ நாட்டின் எப்பகுதியிலும் தனது அரசாங்கத்துடனான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் தொடர்புகளைப் பேணுவதற்கும் நாட்டின் இரு தேசிய மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைப் பயன்படுத்துவதற்கும் அதேபோல் தொடர்பு மொழியான ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கும் அரசியலமைப்பின் கீழ் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

சிங்களத்தையோ, தமிழையோ முதன்மை நிர்வாக மொழியாகக் கொண்ட மாகாணங்களில் குறித்த முதன்மை நிர்வாக மொழியில் பொதுமக்கள் தமது அலுவல்களைக் கொண்டு நடத்துவதற்கு அரசியலமைப்பின் 16 ஆவது திருத்தத்தின் 22/4 உறுப்புரையில் பூரண உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களின் முதன்மை நிர்வாக மொழியாகத் தமிழும், ஏனைய ஏழு மாகாணங்களின் பதினேழு மாவட்டங்களின் முதன்மை நிர்வாக மொழியாகச் சிங்களமும் உள்ளதால் அம்மொழிகளில் தேவைகளை பொதுமகக்ள் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள அரச நிறுவனங்களில் தாம் விரும்பும் எந்தவொரு மொழியிலும் தனது கருமங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதுடன் எக்காரணம் கொண்டும் நாட்டில் எப்பகுதியிலும் தனது மொழியில் கருமமாற்றிக்கொள்ளத் தடையில்லை என்பது அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள மொழியுரிமையாகும். அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள, வழங்கப்பட்டுள்ள மொழியுரிமையை நடைமுறைபபடுத்திப் பயன்பெற பல தடைகள் தாண்ட வேண்டிய நிலை காணப்படுகின்றது.

 

த. மனோகரன்
உதவிச் செயலாளர் (தொழில் உறவுகள்)
தேசிய சகவாழ்வு,
கலந்துரையாடல்
மற்றும் அரச
கருமமொழிகள் அமைச்சு