12,000 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சரியான முறையில் புனர்வாழ்வளிக்கப்பட்டதா?

புனர்வாழ்வளிக்கப்பட்ட 12 ஆயி ரம் முன்னாள் எல்.ரி.ரி.ஈயினருக்கும் சரியான முறையில் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளதா என ஆராயப்பட வேண்டியுள்ளது. எனவேதான் வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். யாழ் குடாநாட்டில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வாள் வெட்டுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுத்திருப்பதுடன், சம்பந்தப்பட்ட சிலர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலைமைகள் காரணமாகவே மேலைத்தேய நாடுகள் வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினாலும், முகாம்களை அகற்றமுடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான முன்னாள் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் உரிய முறையில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரா என்பது ஆராயப்படவேண்யுள்ளது.

இவ்வாறான சூழ்நிலைகள் காரணமாகவே வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை முழுமையாக அகற்றமுடியாதிருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.