முன்னால் சென்றால் பின்னால் தெரிவதில்லை. – கவலையுறும் மக்கள்.

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள மாவடிமுன்மாரி சந்தியிலிருந்து தாந்தாமலை வரையான வீதியினூடாக பயணிக்கும் போது முன்னால் செல்பவர் பின்னால் செல்பவருக்கு தெரிவதில்லையென அப்பிரதேசத்துமக்கள் கவலையுடன் கூறுகின்றனர்.

கிறவல் வீதியாக, இப்பிரதானவீதி அமைக்கப்பட்டுள்ளமையினால், வாகனங்கள் செல்லும் போது கிறவல் தூசிகள் மேலெழுந்து வீதியினை மறைக்கின்ற, வீதியால் செல்லமுடியாத நிலையேற்படுகின்றது. அதேவேளை கண்கள் மற்றும் ஏனைய உடலங்கங்களில் தூசிகள் படிகின்ற துர்ப்பாக்கிய நிலையும் வெப்ப காலங்களில் ஏற்படுவதாக பயணிகள் குறிப்பிடுகின்றனர். இதனால் உடைகள் அழுக்கடைகின்ற, நோய்கள் ஏற்படுகின்ற வேதனையான சம்பவங்களும் நடந்தேறுவதாக குறிப்பிடுகின்றனர். அதேபோன்று வீதி குழியும், குன்றுமாக காணப்படுவதினால் மழைகாலங்களில் வீதியால் செல்லமுடியாத நிலையேற்படுகின்றது. மூன்று அடிக்கும் மேலாக குறித்த வீதியால் நீர்பரவுகின்ற தன்மையும் வருடாந்தம் இடம்பெற்று வருகின்றது. இதனால் இவ்வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாகவும் தடைப்படுகின்ற நிலையும் இருந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறு மழைகாலங்களில் பயணித்து, பயணிகள் மரணித்த சம்பவமும் இடம்பெற்றுள்ளதாகவும் அப்பிரதேசத்து மக்கள் குறிப்பிட்டனர்.

குறித்த வீதியினை, புனரமைத்து வழங்குமாறு பலதடவை குறிப்பிட்டும், விரைவில் செய்யப்படும் எனக்குறிப்பிடுகின்றனர். அவ்வாறு குறிப்பிட்டு பலவருடங்களை கடந்து சென்றுள்ளபோதும், வருடாந்தம் தாந்தாமலை ஆலய உற்சவத்திற்கு மாத்திரம் வீதியில் ஒருசில இடங்களில் கிறவலை இட்டு பரப்புகின்ற நிலைமட்டுமே இடம்பெற்றுவருவதாக மக்கள் கூறுகின்றனர்.

கிழக்கிலங்கையில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயமாக தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயத்திற்கு நாட்டின் பலபாகங்களிலும் இருந்து லெட்சக்கணக்கான மக்கள் உற்சவகாலங்களில் வருகைதந்துசெல்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று அன்றாடம் விவசாயிகள், மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பயணிக்கின்ற வீதியாகவும் இருக்கின்றது. மேலும் இலங்கை அரச மற்றும் தனியார் பேரூந்துகளும் இவ்வீதியால் செல்கின்றன.

இவ்வாறான வீதியினை புனரமைத்து வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.