மாவடிமுன்மாரியில் கட்டடம் உடைப்பு – கடிதமும் வைப்பு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மாவடிமுன்மாரியில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினால் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய கட்டடம் இனந்தெரியாதோரல் உடைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றதாக தெரியவருகின்றது. கட்டடம் உடைக்கப்பட்ட இடத்தில்,  இது மாவீரர் துயிலும் இல்லம், இதில் யாரும் அனுமதியின்றி பிரவேசிப்பது குற்றம். இங்கு எந்த கட்டடம் கட்டப்பட்டாலும் உடைபடும். இப்படிக்கு மாவடிமுன்மாரி மக்கள் என எழுதப்பட்ட துண்டுப்பிரசுரமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளரிடம் வினாவிய போது, குறித்த பகுதியில் மத்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் மருந்தகம் ஒன்றினை அமைப்பதற்கான கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. கட்டத்திற்கான அத்திவாரம் அமைக்கப்பட்டு அத்திவாரத்திற்கு மேல் செங்கல் கட்டுப்பட்ட நிலையில், செங்கற்கட்டுக்கள் உடைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் அப்பிரதேசத்து மக்கள்  அறிவித்தனர்.

இச்சம்பவத்தினையடுத்து திங்கட்கிழமை(31) மாலை 02மணிக்கு மாவடிமுன்மாரி, பனிச்சையடிமுன்மாரி மக்களுடன் கலந்துரையாடல் கூட்டமொன்று நடாத்தப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் இச்சம்பவத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும், குறித்த கட்டடம் அமைக்கப்படும் காணி துயிலும் இல்லத்திற்கு அண்மையில் உள்ளதே தவிர, துயிலும் இல்ல காணி இல்லையெனவும், குறித்த இடத்தில் கட்டடம் அமைப்பதில் தமக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை. தமக்கு இவ்வாறான கட்டடம் அமைக்கப்படவேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.