நல்லிணக்க செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாண சபை பூரண ஒத்துழைப்பு வழங்கும்

இலங்கையின் அறநெறி கல்விக்காக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை தாபனமயப்படுத்துகின்ற வேலைத்திட்டத்தின் ஜந்தாவது நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கமைய தேசிய ஓருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு நேற்று திருகோணமலை உட்துறைமுக வீதியிலமைந்துள்ள இந்து கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் பௌசி உரையாற்றுகையில்,
நாட்டின் அபிவிருத்தியானது நல்லிணக்கம் நட்பு சமாதானம் போன்ற முக்கிய பண்புகளில் தங்கியுள்ளது. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் நாட்டை முன்னிலைப்படுத்தி ஒற்றுமையாக செயற்பட்டு வருவதனால் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே நாம் அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் செயற்படும் போது எமது நாடும் முன்னேற்றப்பாதையில் விரவாக தடம்பதிக்கும் என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் உரையாற்றுகையில்,
சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு நல்ல பெயர் ஏற்படும் போது பல நன்மைகளை நாம் பெறமுடியும். அதற்கு நல்லிணக்க செயற்பாடுகள் இன்றியமையாதது. வட கிழக்கிலே உள்ள பெண்களின் சமத்துவம் சகல விடயங்களிலும் பேணிப்பாதுகாக்கப்படல் வேண்டும். தொழிலிண்மை சமூகத்தில் பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக இதன் போது குறிப்பிட்டார்.
மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு , நல்லிணக்க செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாண சபை பூரண ஒத்துழைப்பு வழங்குமென்று கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம மற்றும்  கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்  ஆகியோர் தெரிவித்தனர்.

 

அரசியல் தீர்வு இழுத்தடிக்கப்பட்டதாக அமைந்தால் அதன் மூலம் பல பிரச்சினைகள் மக்கள் மத்தியில் ஏற்படும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப். துரைரட்ணசிங்கம், எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண அமைச்சர் ஆரியவதி கலப்பதி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர், தேசிய ஓருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி, தேசிய ஓருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு.சுஹைர், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன, அரச அதிகாரிகள், அறநெறி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.