வடமாகாணத்தில் 49 கிராமங்கள்

எழுச்சிக் கிராமம் (உதாகம) வேலைத்திட்டத்திற்காக இந்த வருடத்தில் அரசாங்கத்தினால் 613 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் மாத்திரம் 49 கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்காக 126 கோடி 70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது என்று தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எல்.எஸ்.பலன்சூரிய தெரிவித்துள்ளார்.
இரண்டாயிரத்து 534 குடும்பங்கள் இதன்மூலம் நன்மை அடையவுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படும் வீடுகளின் எண்ணிககை ஆயிரமாகும். வடக்கு மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படும் வீடுகளுக்காக குடும்பம் ஒன்றுக்கு ஐந்து இலட்சம் ரூபா அறவிடப்படாத கடன் வழங்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.
யுத்தத்தை எதிர்கொண்ட குடும்பங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை வவுனியா போகஸ்வேவ ஆகிய பகுதிகளில் ஆயிரத்து 740 குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குவதற்கான திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக இங்கு ஒன்பது எழுச்சிக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் 50 சதவீதமான பணிகள் நிறைவடைந்துள்ளன.
அரசாங்கத்தின் எழுச்சிக் கிராமம் வேலைத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட இலக்கு வெற்றி கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்
இந்த வருடத்தில் மாத்திரம் 284 எழுச்சி கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் 156 கிராமங்களின் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த வருடத்தில் உத்தேச நிர்மாணத்திற்காக சுமார் 614 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏனைய ஏழுச்சி கிராமங்களின் நிர்மாணப்பணிகள் செப்டெம்பர் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படவுள்ளது.