1983 ஆம் ஆண்டு கலவரத்தில் 7 தமிழர்கள் மாத்திரமே உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவிப்பு

1983 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற கலவரங்களில் 7 தமிழர்கள் மாத்திரமே உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதலளிக்கும் வகையில், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு இதனை அறிவித்தது.

1983 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற இனக்கலவரங்களினால் இறந்த, காயமடைந்த மற்றும் காணாமற்போன தமிழர்களின் எண்ணிக்கையை அவர்கள் வசித்த மாவட்டங்களின்படி தனித்தனியாக தெளிவுபடுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரிடம் கோரியிருந்தார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருக்குப் பதிலாக ஆளுங்கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதற்கான பதிலை  சபையில் சமர்ப்பித்தார்.

அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களில், 1983 ஆம் ஆண்டு கலவரங்களில் மொத்தமாக 7 தமிழர்களே உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் கூட காயமடையவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனக்கலவரங்கள் இடம்பெற்ற மாவட்டங்களில் அமைச்சு கொழும்பு மாவட்டத்தையும் உள்ளடக்கவில்லை.

அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி பதுளை மாவட்டத்தில் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், 67 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத்தின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 48 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அதன்படி மொத்தமாக 83 ஜூலை கலவரத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்துள்ளதுடன், 118 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற கலவரத்தில் பதுளை, மாத்தறை, கண்டி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மக்கள் எவரும் கொலை செய்யப்படவில்லை என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

newsfirst