ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணிக்கு போனஸ் ஆசனம் தொடர்ந்தும் மறுக்கப்படுகிறது

வட மாகாண சபையின் போனஸ் ஆசனத்திற்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கு தொடர்ந்தும் வாய்ப்பு மறுக்கப்படுவதாக கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகளின் பிரகாரம், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்ற இரண்டு மேலதிக ஆசனங்களில் ஒன்றுக்கு, சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்காளிக் கட்சிக்கும் வழங்கப்பட்டுவந்த வாய்ப்பு தமது கட்சிக்கு மறுக்கப்படுவதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடிதத்தில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

மற்றைய போனஸ் ஆசனம் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முஸ்லிம் ஒருவருக்கு வழங்குவதாகக் கூறப்பட்டிருந்தாலும், பதவியைப் பெற்றுக்கொண்ட அஸ்மின் அவர்கள் தமிழரசுக் கட்சி அங்கத்தவர் போன்றே செயற்பட்டார். இறுதியாக நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞரணி மாநாட்டில் கலந்துகொண்டு தொடர்ந்து தமிழரசுக் கட்சி அங்கத்தவராக செயற்படுகின்றார்.சுழற்சி முறையிலான போனஸ் ஆசனத்தின் முதல் வாய்ப்பைப் பெற்ற மேரி கமலா, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டிருந்தாலும் தமிழரசு கட்சி உறுப்பினராக செயற்பட்டதோடு, ஒன்றரை வருடகாலத்திற்கு மேலாக மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்தார்.

பதவிக்காலத்தின் ஒரு வருட முடிவில் தற்போது மாகாண சபை உறுப்பினர் செ. மயூரனை பதவி நீக்கும் விடயத்தில் காட்டும் தீவிரத்தை மேரி கமலாவை பதவி நீக்குவதில் தமிழரசுக் கட்சி காட்டியிருக்கவில்லை. தற்போது மேரி கமலா தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளையின் உப தலைவராக செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஜே.ஆரின் பாணியில் பதவி விலகல் கடிதத்தினை ஏற்கனவே வாங்கி வைத்திருந்த தமிழரசுக் கட்சி, பதவியிலிருந்த மாகாண சபை உறுப்பினர் செ.மயூரனுக்கு தெரியாமலேயே அவரது பதவி விலகல் கடிதத்தினை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தார்மீக நெறிகளை மீறி, மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் தமிழரசுக்கட்சி, கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்ற இரண்டு மேலதிக ஆசனங்களின் நியமனங்களில் தன்னிச்சையுடன் செயற்பட்டு வருகின்றமை அப்பட்டமான உண்மை.

என அந்த கடிதத்தில் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.