இலங்கை தமிழர் கெத்சி சண்முகத்திற்கு மெக்சேசே விருது

இலங்கையை சேர்ந்த ஆசிரியரான கெத்சி சண்முகத்திற்கு பிலிப்பின்ஸின் உயரிய விருதான ரெமோன் மெக்சேசே விருது வழங்கப்படவுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபரான ரெமோன் மெக்சேசே நினைவாக ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது.
இந்த விருதிற்காக ஆறு முக்கியஸ்தர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. அவர்களில் 82 வயது நிரம்பிய கெத்சி சண்முகம் என்ற இலங்கை ஆசிரியையும் உள்ளடங்குகின்றார்.
இவர் உளவியல் ஆலோசகராக கடமையாற்றினார். போர் நிகழ்ந்த காலப்பகுதியில் குண்டுகளையும் அச்சுறுத்தல்களையும் தாண்டி வேலை செய்து, விதவைகளுக்கும் அநாதைகளுக்கும் சிறுவர்களுக்கும் உளவள ஆலோசனை வழங்கிய பெருமை இவரை சாரும் என மெக்சேசே மன்றம் அறிவித்துள்ளது.
விருது பெறும் ஆறு பேரும் குறைந்த வசதிகள், கடுமையான எதிர்ப்பு போன்றவற்றுக்கு மத்தியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சளைக்காமல் தமது சேவைகளை முன்னெடுத்ததாக மன்றத்தின் தலைவி கார்மென்சிட்டா அபெல்லா தெரிவித்தார்.
இவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி மெனிலாவில் நடைபெறவுள்ள விருது விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதற்கு முன்னர் இசைக்கலைஞர் றுனு அமரதேவ, சர்வோதய தலைவர் ஏ.ரி.ஆரியரட்ன ஆகியோர் குறித்த மெக்சேசே விருது வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.