மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஜயம்.

க.விஜயரெத்தினம்)
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமகே அவர்கள் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு இன்று(28.7.2017) வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடுவதற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தின் அழைப்பின் பேரில் திடீர் விஜயத்தை பாடசாலை மேற்கொண்டுள்ளார்.கௌரவ ஆளுநர் ரோஹித போகல்லாகமகே தனது கடமையை பொறுப்பேற்று முதன் முதலில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கே விஜயம் மேற்கொண்டுள்ளார் விஷேட அம்சமாகும்.முதலில் ஆளுநரை மலர்மாலை அணிவித்து மலர்கொத்து வழங்கி வரவேற்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆளுநரின் பாரியார்,ஆளுநர் செயலாளர் திருமதி.முரளீஸ்வரன்,முன்னாள் இப்பாடசாலையின் அதிபரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிறின்ஸ் காசிநாதர்,மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.கோபிந்தராஜா (நிருவாகம் ) அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ், மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தலைவர் எஸ்.சசிதரன்,பாடசாலை அபிவிருத்தி சங்கத் தலைவரும் பொறியியலாளருமான டீ.ஏ.பிரகாஸ்,பொறியலாளர்களான வை.கோபிநாத்,என்.திருவருட் செல்வம்,பிரதி அதிபர் இ.பாஸ்கரன் ஆகியோர்கள் பாடசாலையின் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள்.
இந்த சந்திப்பில் பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ்  தலைமையிலான குழுவினருக்கும்,ஆளுநர் ரோஹித போகல்லாகமகே தலைமையிலான குழுவினருக்கும் இடையே ஒரு மணித்தியாலம் பேசப்பட்டது.
இச்சந்திப்பில் மட்டக்களப்பு  மெதடிஸ்த மத்திய கல்லூரியினை முழுமையான  தேசிய பாடசாலையாக தரமுயர்த்தல்,பாடசாலையின் பௌதீக ஆளணி வசதிகளை நிவர்த்தி செய்தல், பாடசாலைக்கு குறுக்கே இருக்கும் வீதியை முழுமையாக மூடித்தருமாறு கோரிக்கை முன்வைத்தல்,போன்ற கோரிக்கைகள் இதன்போது பாடசாலை பழைய மாணவ சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு எழுத்து மூலமான ஆவணமும் ஆளுநர் ரோஹித போகல்லாகமகேக்கு வழங்கி வைக்கப்பட்டது.
 இதனை ஆளுநர் அவர்களால்  நேரடியாக பார்வையிட்டு பரிசீலனை செய்யப்பட்டது.பாடசாலையின் குறுக்கே இருக்கும் வீதியை பார்வையிட்டு இதனை மூடுவதற்குரிய மேலதிக நடவடிக்கையை தாம் எடுப்பதாக குறிப்பிட்டார்.அதே போன்று பாடசாலையின் பௌதீக வளங்கள்,ஆளணி வசதிகளையும் நிவர்த்தி செய்து தருவதாக தெரிவித்ததோடு இப்பாடசாலையை  தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு உரிய நடவடிக்கையை தாம் பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.
 இதன்போது மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஸ்தாபகர் வில்லியம் ஓல்ட் அவர்களின் நினைவுக்கல் இருக்கும் இடமான மட்டக்களப்பு கூட்டுறவு சங்க கட்டிடத்தையும்,அதன் வளாகத்தையும் இக்கல்லூரிக்கு மீண்டும் பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இவ்விடத்தை மீண்டும் பாடசாலை அவரின் நினைவாக செயற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை வழங்குவதாக உறுதிமொழி வழங்கினார்.