கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சின் வளப்பங்கீட்டில் தமிழர்கள் புறக்கணிப்பு.

பங்காளிகள் என்பதில் வெட்கி தலைகுனிகின்றேன்.  – பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் .
(பழுகாமம் நிருபர்)
“கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சின் வளப்பங்கீட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழ் தேசிய சுட்டமைப்பு கிழக்கு மாகாண சபையின் பங்காளிகள் என்பதில் வெட்கி தலைகுனிகின்றேன் என கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். வெல்லாவெளி திக்கோடையில் ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவுக்கான கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாகண சபையின் சுகாதார அமைச்சு கண்துடைப்பு செயல்களை தமிழர் பிரதேசங்களிலே மேற்கொண்டு வருகின்றது. அதற்கு சிறந்த உதாரணம் திருக்கோவில் வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டது. கடந்த பத்து வருடங்களாக சுகாதார அமைச்சு மாறிமாறி முஸ்லிம் சகோதரர்களே அப்பதவியில் உள்ளார்கள். நாங்கள்; தமிழர் பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளை தரமுயர்த்த வேண்டும், அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று பல தடவைகளில் பல பிரேரணைகளை முன்வைத்த போதெல்லாம் அவற்றை அலட்சியப்படுத்தி தங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதில் மும்முராமாக செயற்பட்டார்கள். நல்லாட்சியில் மத்திய சுகாதார அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வளப்பங்கீடு சரியான முறையில் மாத்திரமின்றி தமிழர் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மற்றும் வேலைவாய்ப்புக்களில் கூட தமிழ் இளைஞர் யுவதிகள் புறந்தள்ளப்பட்டுள்ளனர். இதனையிட்டு நான் வேதனைபடுவதுடன் மாகாணசபையில் கூட்டமைப்பு பங்காளிகளாக இருப்பதையிட்டு வெட்கி தலைகுனிகின்றேன் என தெரிவித்தார்.
மேலும் செங்கலடி காயான்மடுவிலே நேற்றை தினம்(24) ஒரு யுத்தகளம் போல் காட்சியளித்தது. மண்ஏற்றிக் கொண்டிருந்தவர்களை பிடிப்பதற்கு வான்நோக்கி சுடப்பட்டதால் இளைஞர்கள் பீதியில் ஆற்றினுள் பாய்ந்த போது அதில் 17வயதுடடைய இளைஞன் நீரில் மூழ்கி இறந்துள்ளான். இதற்கு முழுப்பொறுப்பையும் விசேட அதிரடிப்படையினரே பொறுப்பேற்க வேண்டும். பின்னர் செங்கலடி வைத்தியசாலையில் மக்கள் எதிர்ப்பினை காட்டிக்கொண்டிருந்த வேளை அதனை கலைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கண்ணீர்ப்புகையினால் குழந்தை ஒன்று இறந்துள்ளது. தமிழர்களின் நிலை இவ்வாறு தான் உள்ளது. எனவும் தெரிவித்தார்.