தாமரைவில் கவிஞனுக்கு கிழக்கு மாகாண அரச தமிழிலக்கிய விருது

திருகோணமலை மாவட்டத்திலுள்ள இயற்கை அழகு பொங்கும் கிராமங்களில் ஒன்று தாமரைவில். இது ஆலங்கேணியை அண்டிய கிராமம். இந்த வில்லில் இருந்து புறப்பட்டவர்தான் கோலேந்தி, எறிகோலன், சுதந்திரன், அகதிக்கவிராயர், சாப்பாட்டுக்கவிராயர், விண்ணாங்கன், அலைஞ்சான் புலவர், மனாப்புலவர், பொடிப்புலவன், இரா இப்படிப்பல நாமங்களைக்கொண்ட கவிஞர் தாமரைத் தீவான். சிறந்த மரபுக் கவிஞன். 1952 இல் எழுதத் தொடங்கினார். 1956 இல் தான் இவரின் கவிதை முதல் ‘வெள்ளைப்பூனை’ சுதந்திரன் பத்திரிகையில் வெளியாகியது. தொடர்ந்து தினகரன், வீரகேசரி, சுடர், புதிய உலகம், காந்தீயம், சந்திரதீபம், சிந்தாமணி, முரசொலி, சஞ்சீவி, நம்தேசம், தினமுரசு, தினக்கதிர், செங்கதிர், தமிழ் உலகம், சர்வதேச தமிழர், மலையகம், மழலை என்செல்வம், வெண்ணிலா, சூடாமணி, சுடர்ஒளி, சந்நிதி, வாழ்க்கை ஆகிய பத்திரைகைகளில் வெளியாகின. வெரித்தாஸ், பிபிஸி,வானொலிகளிலும் ஒலிபரப்பப்பட்டன. அது தவிர உள்@ரில் கேணிச்சுடர்,ஈச்சம்பழம்,பதுமைநெஞ்சங்கள், தென்றல், தாகம், கோணைத்தென்றல், வசந்தம், சிவநெறி போன்ற கையெழுத்து, தட்டச்சு மற்றும் அச்சுச் சஞ்சிகைகளிலும் வெளியாகின,

ஆசிரியர், அதிபராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள தாமரைத்தீவான் 24.07.1932 இல் பிறந்தார். இவரது இயற்பெயர் இராசேந்திரம்.தந்தையாரின் பெயர் சோமநாதர். தாமரைவில்லில் பிறந்தாலும்,ஈச்சம் தீவுக் கிராமமே இவரை வளர்த்தது. தான் பிறந்த ஊர், தன்னை வளர்த்த ஊர் இரண்டையும் இணைத்து ‘தாமரைத்தீவான்’ என்ற புனைப்பெயரைச் சூட்டிக் கொண்டார். இவரின் புனைப் பெயரில் ஒட்டிக் கொண்ட தாமரைவில் – கிராமம் இன்று எங்கோ தொலைந்து விட்டது. தாமரைவில் ரோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக்கல்வி, பின்னர் மூதூர் அர்ச் அந்தோனியார்ரோமன் கத்தோலிக்க தமிழ்க்கவன் பாடசாலையில் மேற்படிப்பு, எஸ். எஸ். ஸி வகுப்பில் சித்தியடைந்தார். பின்னர் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் சேர்ந்துகொண்டார்.
1992 இவரின் முதல்நூல் ;பிள்ளைமொழி’ அன்பர் நிதியத்தால் வெளியிடப்பட்டது.அந்த ஆண்டில் ஒன்பது தினங்கள் கழித்து 24.07.92இல் இவரது ;கீறல்கள்’ என்ற நூல் தாகம் கலை இலக்கிய வட்டத்தால் வெளியிடப்பட்டது. இவரின் ‘கட்டுரைபத்து’ என்ற நூல்தாகம் இலக்கிய கலை வட்டத்தால் வெளியிடப்பட்டது. இவரின் ‘கட்டுரைபத்து’ என்ற நூல்விஜே பதிப்பகத்தினால் 01.05.97 இல் வெளியிடப்பட்டது. ‘போரும் பெயர்வும்’ என்ற 05.09.99 இல் அதன் வெளியீடு வெளியிடப்பட்டது. அம்மா பதிப்பகம் இவரின் ‘ஐம்பாலைம்பது’ என்ற நூலை 11.05.2001 இல் வெளியிட்டது. இவரின் நூல்களுள் ‘கீறல்கள்’1992ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது. இவற்றைத் தவிர, முப்பத்திரண்டு இணைப்பு என்பாநூறு, சிறுவிருது, மும்மறை, பத்துப்பத்து, வள்ளுவர் அந்தாதி,போர் நாற்பது என்பன குறிப்பிடத்தக்கவை.
பழந்தமிழ் இலக்கியங்களை ஊன்றிக் கற்றவர் இவர். திருக்குறளை ஒப்புவிப்பதில் ஒப்பற்றவராகத் திகழ்கின்றார். சிரிக்க, சிரிக்க சிந்தனையைத் தூண்டும்படி பேசுவார். இவர் எவரையும் மனம் புண்படப் பேசியதில்லை. அவரது எழுத்துக்கள் யதார்த்தமானவை. தாமும், மக்களும் அடைந்த அவலங்களை இவரின் எழுத்துக்கள் துல்லியமாக வெளிக்கொணர்ந்துள்ளன. கவிதையைமூச்சாகக் கொண்டவர். இவர் ஏறாத கவியரங்கமே இல்லை எனலாம். இவர் கவிதை சொல்லும் பாங்கே தனி. ஓலி வாங்கியை இவர் பிடித்துக் கொண்டு கவிதை சொல்லத் தொடங்கினால் அரங்கம் சுறுசுறுப்பாகிவிடும்.
தாகம் கலை இலக்கிய வட்டம் 1991இல் இவரைக் கௌரவித்தது. ‘திருகோணமலை குறள் திலகம்’ என்று 1996இல் குறளமுதத்தினால் பட்டம் சூடப்பட்டார். 1996இல் முத்தமிழ் வளர்கலை மன்றம், 1999இல் திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஆண்டு விழா ஆகியவற்றின் போது பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். வன்செயல்களின்போது இவர் தனது பொக்கிஷங்களாகக் கருதிய அகநானூறு, புறநானூறு, மலைப்பா, உண்மை அம்பாள் காவியம், கீறல்கள் ஐஐ, விநாயகமாலை, 700நூல்கள், 27 கவிதைத் தொகுப்புகள், 13 மேடைக்கவி ஏடுகள், அச்சுநறுக்குள் அழிந்து போயின. இதனை நினைக்கும் போது தாமரைத்தீவானின் மனம் ஆறுவதில்லை.
இப்பேர்ப்பட்ட பேரிழப்புகளைத் தாங்கிக் கொண்டு நம்மத்தியில் வாழ்ந்துவரும் தமிழ் அறிஞன், கவிஞன் தாமரைத்தீவானை இவ்வாண்டு கிழக்கு மாகாண அரச தமிழ் இலக்கிய விழாவில்அவரால் 28.07.2016இல் வெளியிடப்பட்ட ‘பொன்னகம் மட்டுமாம்’ எனும் 25வது கவிதைத் தொகுதிக்கு சிறந்த தமிழிலக்கிய நூலுக்கானவிருது வழங்கிக் கௌரவிக்க மாகாணக் கல்வி, பண்பாட்டுத் திணைக்களம் தீர்மானித்திருப்பது குறித்து ஈழத்தமிழ் உலகம் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றது. வாழும்போது கலைஞனை வாழ்த்துவதே மேலான பண்பாகும். அண்ணாதுரை, நெடுஞ்செழியன், சிற்றரசு, தமிழரசி ஆகியோரின் தந்தையாகவும், தவமணியின் துணைவராகவும் கொண்டு தனது 85வது பிறந்தநாளைக் கடந்து வாழும் தாமரைத்தீவான் பல்லாண்டு வாழ்ந்து திருகோணமலைத் தமிழ் மண்ணுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும்.