அனுராதபுர மருத்துவமனையில் கால் மாற்று அறுவைச் சிகிச்சை – தமிழ் மருத்துவரின் சாதனை

சிறிலங்காவின் வரலாற்றில், முதல் முறையாக, கால் மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்றைச் செய்து தமிழ் மருத்துவர் ஒருவர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

அனுராதபுர மருத்துவமனையில் திங்கட்கிழமை இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மூளைச் சாவு அடைந்த ஒருவரின் காலை, அகற்றி, அங்கு சிகிச்சை பெற்று வந்த மற்றொருவருக்குப் பொருத்தி, இரத்தநாள மற்றும் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணரான மருத்துவ கலாநிதி ஜோயல் அருட்செல்வம் தலைமையிலான மருத்துவர்கள் குழு இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.

உலகம் முழுவதிலும், இதுபோன்ற 10இற்கும் குறைவாக அறுவைச் சிகிச்சைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விபத்து ஒன்றில் ஒரு ஆண்டுக்கு முன்னர் முழங்காலுக்கு மேல் வரையான பகுதியை இழந்த 32 வயதுடைய இளைஞனுக்கே, இந்த கால் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவருக்கு மூளைச்சாவு அடைந்த 52 வயதுடைய ஒருவரின் கால் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த அறுவைச் சிகிச்சைக்கு, மூளைச்சாவடைந்தவரின் குடும்பத்தினரும், காலை இழந்திருந்த இளைஞனும் ஒப்புதல் அளித்திருந்தனர்.

Dr Arudchelvamஇந்த அறுவைச் சிகிச்சையை மருத்துவர் ஜோயல் அருட்செல்வம் தலைமையில், மருத்துவர்கள் அமில இரத்நாயக்க, நுவான் விஜேசிங்க, லேவன் காரியவசம் ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்கொண்டனர்.

இத்தகைய உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கு, இரண்டு பேருடைய இரத்த வகைகள், தோலின் நிறம், மற்றும் ஏனைய பௌதிக காரணிகள் அனைத்தும் ஒத்துப் போக வேண்டும் என்று மருத்துவர் அருட்செல்வம் தெரிவித்தார்.

இளைஞனுக்குப் பொருத்தப்பட்ட கால் நன்றாக செயற்படத் தொடங்கியுள்ளது என்றும், அறுவைச் சிசிக்சை செய்யப்பட்டவர் தற்போது தேறிவருவதாகவும், அவர் கூறினார்.