தமிழரசு கட்சியில் இணையப்போவதாக பொய்பிரச்சாரம்.- ரெலோ உபதலைவர் பிரசன்னா.

(பழுவூரான்) தமிழரசு கட்சியில் நான் இணையப்போவதாக சில விஷமிகள் என்மீது பொய்பிரச்சாரங்களை அண்மைக்காலமாக மேற்கொண்டு வருகின்றனர். என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ரெலேவின் உப தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார். சமகால அரசியல் தொடர்பாக அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலே இதனை தெரிவித்தார்.
25 வருட காலமாக இந்த மண்ணையும், மக்களையும் எத்தனையோ கெடுபிடிகள் வந்த போதும் தவிக்க விட்டு செல்லவும் இல்லை, என்னுடைய தலைவர் சிறீ சபாரெத்தினம் வழியில் நின்று அவரையும், போராளிகளையும் தெய்வமாக மதிக்கின்ற நான் எவ்வாறு, தமிழீழ விடுதலை இயக்கத்தினை விட்டு செல்ல முடியும். பல ஆண்டுகளாக தமிழீழ விடுதலை இயக்கம் என்னும் நாமத்தில் அலுவலகம் நடாத்திவருகின்றேன். 12வருடம் செயலாளர் நாயகமாகவும், 4 தடவை உப தலைவராகவும், தற்போதும் உப தலைராகவும் இருக்கும் நான் எவ்வாறு தமிழரசு கட்சியில் இணைய முடியும். நான் மனசாட்சியுடன் என்னுடைய தலைவர் மற்றும் போராளிகளுடன் இந்த அலுவலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். தமிழரசு கட்சியில் நான் இணையப்போவதாக சில விஷமிகள் பரப்புரை செய்து வருகின்றனர். இது முற்றிலும் பொய்யானதொரு பிரச்சாரம். தமிழரசு கட்சியில் உள்ள ஒருவர் சொல்லட்டும் நான் அக்கட்சியில் இணையப்போவதாக கேட்டிருக்கின்றேனா? என சினந்து கொண்டார்.
மேலும் கடந்த பத்து வருடங்களாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்களாக இஸ்லாமிய சமூகத்தினர் தொடர்ந்து இருந்து வருவதனால் அவர்கள் தொடர்பான சுகாதார துறை வளர்ச்சி அடைந்து வருகின்றது. இதுவரை காலமும் திருக்கோவில் வைத்தியசாலை மாத்திரமே தரமுயர்த்தப்பட்டு;ள்ளது. கிழக்கு மாகாண நிதி மற்றும் வளப்பங்கீட்டிலும் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் மேலும் தெரிவித்தார்.