புளுகுணாவை குளத்தில் மீன் பிடியில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளுகுணாவை குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் இருவர் மீது இனந்தெரியாதோர் தாக்கிய சம்பவம் செவ்வாய்க்கிழமை(25) மாலை இடம்பெற்றுள்ளது.
தாந்தாமலை கிராமிய மீனவர் சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
புளுகுணாவை குளத்தில் மீன்பிடியில் மாலைவேளையில் ஈடுபட்டிருந்தபோதே, இனந்தெரியாதோர் தம்மை தாக்கியவிட்டு, தம்மிடம் இருந்த மீன்பிடி வலை மற்றும் தொலைபேசிகளையும் பறித்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
இதனால் அங்குள்ள மீனவர்களிடையே பதற்ற நிலையேற்பட்டதாக தாந்தாமலை கிராமிய மீனவர் அமைப்பினர் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடொன்றினை நேற்று இரவு 8மணியளவில் பதிவு செய்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.