வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள வடமாகாண மக்களுக்கு நிவாரணத்திற்கான நிதி ஒதுக்கீடு

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்குவதற்காக நீர்த்தாங்கிகள் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

இந்த உதவிகளுடன் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குதேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

 

வறட்சியின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமை குறித்து பாராளுமன்ற நிலையியல் கட்டளை 23 (2) கீழ் இன்று பாராளுமன்றத்தில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்தேவானாந்தா கேள்வியொன்றை முன்வைத்திருந்தார்.

 

இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு- வடமாகாண மக்களுக்கு மானியம் வழங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

குடிநீரை விநியோகிப்பதற்காக 45 ரக்டர் பவுசர்களும் லொறி பவுசர்களும் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து பவுசர்களுக்கும் மேலதிக சாரதிகளை ஈடுபடுத்தி நீரை விநியோகிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

தேவையான 650 நீர்த்தாங்கிகளும் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மற்றும் தீவுப்பகுதிகளுக்கு விஜயம்செய்துள்ளேன். அங்கு நிலைமை மோசமாகவுள்ளது.

 

நீரை விநியோகிப்பதற்கு தேவையான நீரை பெற்றுக்கொடுப்பதற்கு கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தொழில்நுட்பவிடயங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடர்பாக எதிர்வரும் அமைச்சரவையில் விளக்கமளிக்க எதிர்பார்த்துள்ளேன்.

 

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அனுராதபுர மாவட்டத்திற்கு விஜயம்செய்தேன் . அங்கு நிலவிய சில குறைபாடுகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அனுராதபுரம் ,பொலநறுவை, வவுனியா, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இப்பிரதேசங்களுக்கும் தேவையான நீர் பவுசர்களை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.