காத்தான்குடி குப்பைகளைக் கொட்டுவதற்கு 5 ஏக்கர் காணி.

காத்தான்குடி ஆற்றுப்பகுதியில் குப்பை பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் 5 ஏக்கர் அரச காணியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான காணி அடையாளம் காணப்பட்டு விரைவில் வழங்கப்படும் என்று உறுதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்த்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக்கினால் விடுக்கப்பட்டு கோரிக்கைக்கு அமைய இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக காத்தான்குடி கழிவுக் குப்பைகளை வாவியில் கொட்டுகின்ற நிலை காணப்படுகிறது. இக்குப்பைகளை கொடுவாமடுவில் அமைக்கப்பட்டுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்குவதானாலும் தரம்பிரித்தே வழங்க வேண்டியிருக்கிறது. அதற்காக 5 ஏக்கர் காணி மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குள் வழங்க ஆவன செய்யுமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவிடம் சிப்லி பாருக் கோரிக்கை விடுத்தார்.
இந்த விடயத்தில் பேசிய, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.கருணாகரம் (ஜனா),
காணி வழங்குவதில் பிரச்சினையில்லை, ஆனால் ஆற்றில் குப்பை கொட்டுவது நிறுத்தப்படுவதுடன், ஏற்கனவே கொட்டுப்பட்டு ஆறு நிரப்பப்பட்டுள்ள பிரதேசத்தினை என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றி தீர்மானம் எடுக்கப்படவேண்டும். இரண்டு கொம்புபோன்று ஆறு நிரப்பப்படுகிறது. இதனால் மட்டக்களப்பு ஆற்றின் வாய்க்கே பிரச்சினை ஏற்படுகிறது. நீண்டகாலமாக இந்தப்பிரச்சினை இருந்துவருகிறது என்றார்.
இதற்குப்பதிலளித்த சிப்லி பாருக்,
காணி வழங்கப்படும் பட்சத்தில் குப்பை கொட்டுவதனை நிறுத்துவதற்கு ஆவன செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.
அதனையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் மாகாண காணி ஆணையாளர் இந்தப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் 5 ஏக்கர் காணியினை அடையாளம் கண்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி என்று பணிப்புரை விடுத்தார்.