மட்டு மாவட்டத்தில் 8407 திட்டங்களுக்காக 6190.78 மல்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது – திட்டமிடல் பணிப்பாளர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டு 8407 திட்டங்களுக்காக 6190.78 மல்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 4190.06 மில்லியன் மாவட்டத்திற்குக்கி டைக்கப்பெற்றுள்ளதாகவும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் திங்கட்கிழமை (24) பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இணைத் தலைவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.சிறிநேசன், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் வரவேற்புடன் ஆரம்பமான இக்கூட்டத்தில் மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் அபிவிருத்தித்திட்டங்கள் குறித்து அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டுக்கென தீர்மானிக்கப்பட்டுள்ள 8407 திட்டங்களில் 410 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதுடன், 1587.08 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் 46 வீதமான வேலைகள் நிறைவடைந்துள்ளது என்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
இவற்றில் இவற்றில் மாவட்ட செயலகத்தினால், 6282 திட்டங்களும், இணை அமைச்சுக்கள் ஊடாக 1721 திட்டங்களும், கிழக்கு மாகாண சபையினால் 142 திட்டங்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலையான அபிவிருத்திக்கான திட்டத்தினால் 100 திட்டங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களினால் 159 திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்றைய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தித்திட்டம், மீள்குடியேற்ற அமைச்சின் கீழான திட்டங்கள், தேசிய மேம்பாட்டுத்திட்டம், கிராமி பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழான வேலைத்திட்டங்கள், கடற்தொழில் நீரியல்வள அமைச்சின் திட்டங்கள், உட்கட்டுமான அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்கள், உலக உணவுத்திட்டஙக்ள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழான திட்டங்கள் உள்ளிட்ட பல:வேறு திட்டங்கள் குறித்துக்கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், திணைக்களங்கள் சார்ந்த விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
இக்கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்வியாளேந்திரன், மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.துரைரெட்ணம், கே.கருணாகரம் (ஜனா), ஞா.கிருஸ்ணப்பிள்ளை, சிப்லி பாரூக் ஆகியோரும், பிரதேச செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், உள்ளுராட்சி சபைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.