நீதிபதி மீதான தாக்குதல் முயற்சியானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும் – துரைராசசிங்கம்

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செலியன் அவர்கள் மீதான தாக்குதல் முயற்சியானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். இந்தத் துன்பியல் நிகழ்வில் தனது கடமையைச் சிறப்புறச் செய்து வீரச்சாவடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பாராட்டுதற்குரியவர் அவரின் இழப்பு தொடர்பில் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செலியன் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செலியன் அவர்கள் மீதான தாக்குதல் முயற்சியானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். இந்தச் சம்பவத்தில் அவர் இலக்கு வைக்கப்படவில்லை என்றவாறான செய்திகள் இதன் கடுமைத் தண்மையை இலதாக்கி உண்மைகள் கண்டறியும் விடயத்தைத் திசைதிருப்புவதாகவும் அமையலாம். இதன் உண்மையைக் கண்டறிவதற்கு தாக்குதல் நடாத்தியவர் கைது செய்யப்பட வேண்டியது கட்டாயச் செயற்பாடாகும். அந்தக் கைதின் மூலமே இதன் உண்மை வெளிப்படும். அவ்வாறு இல்லாமல் ஊகங்கள் அல்லது தெளிவற்ற சூழ்நிலைச் சாட்சியங்கள் மூலம் இவ்விடயத்தின் உண்மைத் தண்மையைத் திசை திருப்பிவிடக் கூடாது.
இவ்வகையில் புலனாய்வுத் துறை காவற்துறை என்பன சரியான முறையில் செயற்படுவதொன்றே அவற்றின் மீதான மக்கள் அபிப்பிராயத்தைச் சரியான முறையில் வெளிப்படுத்தக் கூடிய செயற்பாடாய் அமையும். இவ்விடயம் மீதான அவர்களின் துரித செயற்பாடுகளே நீதித் துறை பாதுகாப்பாக செயற்படுவதற்கு உத்தரவாதம் உண்டு என்ற செய்தியையும் நிலை நாட்டும். அதன் அடிப்படையில் நீதிபதிகள் அவர்களது கடமையை சரிவரச் செய்யக் கூடியதாகவுதம் இருக்கும். அது மட்டுமன்றி சாட்சிகள் எவ்வித அச்சமுமின்றி நீதியை நிலை நாட்டவும் இந்தச் சம்பவம் தொடர்பிலான புலனாய்வுச் செயற்பாடுகள் காரணமாகவும் அமையும்.
இந்தத் துன்பியல் நிகழ்வில் தனது கடமையைச் சிறப்புறச் செய்து வீரச்சாவடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பாராட்டுதற்குரியவர் அவருடைய முன்மாதிரி ஏனைய மெய்க்காவலர்களும் பின்பற்ற வேண்டியதொன்றாகும். அவரின் இழப்பு தொடர்பில் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகின்றன. அதே போன்று மற்றைய பாதுகாவலரும் இத்தகைய பாராட்டுக்குரியவரே.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் மேலும் எமது கண்டணங்களைத் தெரிவிப்பதோடு இவ்விடயம் நீதிபதி இளஞ்செலியன் அவர்களுக்கு அவர் நீதி வழங்கும் செயற்பாட்டில் எவ்வித தளர்வினையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பது எங்களினதும் மக்களினதும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாகும் என்று தெரிவித்தார்.