மட்டு. மாவட்ட மணல் விற்பனைக்கு விலைக்கட்டுப்பாடு

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகஸ்ட் முதல் விவசாய அமைப்புக்கள், கிராம அபிவிருத்தி அமைப்புக்கள் மற்றும் உள்ளுராட்சிச் சபைகளுக்கே மண் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது..
நேற்றைய தினம் திங்கட்கிழமை (24) பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இணைத் தலைவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட்,  பாராளுமன்ற உறுப்பினர்  ஜீ.சிறிநேசன், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத்திலுள்ள மணல் தேவையை நிவர்த்தி செல்வதிலும் சாதாரண மக்களுடைய வேலைகளுக்கு மண் மற்றும் கிரவலைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருவதாக பிரஸ்தாபிக்கப்பட்டது.
அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், புவிச்சரிதவியல் திணைக்களப் பொறியியலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
இருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் விலையின் அதிகரிப்பு பெரும் பிரச்சினையாக உள்ளது. அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே இதற்கு ஒரு தீர்க்கமான முடிவினை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு எடுக்கவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கேட்டுக் கொண்டார். அதே நேரம், மாகாண சபை உறுப்பினர்களும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர்.
இதனையடுத்து மாவட்டத்தில் மண் மற்றும் கிரவல் விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது விவசாய அமைப்புக்கள், மீனவ அமைப்புக்கள், கிரம அபிவிருத்தி அமைப்புக்களுக்கு வழங்குவதன்மூலம் கிராமத்தவர்களின் வாழ்வாதார மேம்பாடு ஏற்படுவதுடன், பிரச்சினையினையும் குறைத்துக் கொள்ளமுடியும் என்று கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் கருத்து வெளியிட்டார்.
அதனை ஆமோதித்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு, புவிச்சரிதவியல் திணைக்களத்திடம், அதற்கான ஏற்பர்டுகள் குறித்து வினவியதுடன், விலைக்கட்டுப்பாடு குறித்தும் வினவப்பட்டது.
அதன்பின்னர், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் 6500 ரூபாவுக்கு கிறவலும், ஆற்று மணல் 12ஆயிரம் ரூபவும் விற்பனை செய்யப்பட்டதாகவும், இக்காலப்பகுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை, வாகனங்களின் விலை அதிகரிக்கப்படவில்லை, தனியாள் கூலி அதிகரிக்கப்படவில்லை அவ்வாறிருக்க மணல் விலை மாத்திரம் எப்படி, 26 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை அதிகரித்தது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனா கேள்வி எழுப்பினர்.
இவ்விடயத்தினை ஆலோசித்த இணைத் தலைவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட்,  பாராளுமன்ற உறுப்பினர்  ஜீ.சிறிநேசன், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் இவ்விலையினை நடைமுறைப்படுத்துவம் வகையில் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து புதிய அனுமதிப்பத்திரங்கள் அமைப்புகளுக்கும், அரச நிறுவனங்கள், உள்ளுராட்சி அமைப்புகளுக்கும் வழங்குவது என்ற தீர்மானத்தினை நிறைவேற்றினர்.
பின்னர், தனியார்களுக்குரிய அனுமதிப்பத்திரங்களை நிறுத்துவது குறித்து தலைமையகத்துடன் கலந்துரையாடி அவர்களுடைய முடிவுகளுக்கு அமையவே நடவடிக்கை எடுக்க முடியும் என்று புவிச்சரிதவியல் பொறியியலாளர் தெரிவித்தார்.
இருப்பினும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது