அரசை கவிழ்ப்பதாயின் 2/3 பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும்

அரசாங்கத்தைக் கவிழ்ப்பதாயின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை எதிரணியினர் நிரூபிக்க வேண்டுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பதுளை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதுளை மாவட்ட கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியதாவது;

அரசைக் கவிழ்க்கும் முயற்சி வெறும் பகற் கனவே. பாராளுமன்றத்தின் அதிகார சமநிலை பற்றி சுட்டிக்காட்டிப் பேசிய அமைச்சர், சமநிலை மாறாத (முன்னுள்ள) நிலையை மாற்ற வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் தேவையெனவும் தெரிவித்தார்.

கூட்டு எதிரணியில் உள்ள அநேகமானோர் தேசிய அரசாங்கத்தைக் கவிழ்த்து புதிய அரசொன்றை அமைப்பதற்கு கனவு காண்கின்றனர்.

அவர்கள் விரும்பும் விதத்தில் நடனம் ஆடலாம். ஆயினும், இந்த அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தும் ஆட்சியில் இருக்கத்தான் போகின்றது. மாற்றமொன்று ஏற்பட வேண்டுமாயின் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பாராளுமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தப்பட்டுள்ளவாறு அரசியலமைப்பின் 70 ஆவது ஷரத்தை மேற்கோள் காட்டிப் பேசிய அவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வுக்கென நிச்சயிக்கப்பட்ட திகதியில் இருந்து நாலரை வருடகால முடிவில் பாராளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதியினால் தேர்தல் ஒன்று நடாத்தப்பட வேண்டுமென கோரப்படுமாயின் பாராளுமன்றத்தில் சமுகமளிக்காத உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதற்கு சாதகமாக வாக்களித்து நிறைவேற்றியே அவ்வாறு செய்ய முடியுமென குறித்த திருத்தம் குறிப்பிடுவதாகவும் தெரிவித்தார்.