இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் சவூதி அரேபிய நாட்டின் இளவரசர் மட்டு-காத்தான்குடி விஜயம்-படங்கள்


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும்,ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் பணிப்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் இலங்கை நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபிய நாட்டின் முன்னணி முதலீட்டாளரும்,இளவரசருமான ஷேஹ் பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத்தை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு 23 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது..

கொழும்பில் இருந்து இலங்கை விமானப் படையின் விஷேட விமானம் மூலம் மட்டக்களப்பு இலங்கை விமானப் படை தளத்திற்கு வருகைதந்த சவூதி அரேபிய நாட்டின் இளவரசர் காத்தான்குடி விஜயம் செய்ததுடன், அவருக்காக காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்விலும் கலந்து கொண்டார்.

இதன் போது கிழக்கு மாகாணத்திற்கும் காத்தான்குடி நகரத்திற்கும் முதற்தடவையாக வருகைதந்த சவூதி அரேபிய நாட்டின் முன்னணி முதலீட்டாளரும்,இளவரசருமான ஷேஹ் பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத்திற்;கு பொன்னாடை போர்த்தப்பட்டு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் விஷேட நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு இலங்கை மற்றும் சவூதி அரேபிய நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வுகளில் மட்டக்களப்பு கெம்பஸின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ்,அஷ்ஷெய்யித் மசூர் மௌலானா,ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி),முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்பட ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வைத் தொடர்ந்து காத்தான்குடி பூர்வீக நூதனசாலை,ரிதிதென்னையில் அமைக்கப்பட்டுவரும்  மட்டக்களப்பு கெம்பஸ் ஆகியவற்றுக்கும் விஜயம் இளவரசர் செய்தார்.

ரிதிதென்னை மட்டக்களப்பு கெம்பஸூக்கு விஜயம் செய்த சவூதி அரேபிய நாட்டின் இளவரசருக்கு மட்டக்களப்பு கெம்பஸின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.