திருகோணமலையில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது..

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

”நல்லூர் கந்தசுவாமி ஆலய தென்மேற்கு வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், நீதிபதி இளஞ்செழியனை காப்பாற்ற முயன்ற அவரது மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகிய நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றையவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்துக்கு நாங்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நீண்டகாலமாக நீதிபதி இளஞ்செழியனது மெய்ப்பாதுகாவலராக இருந்து அவரை காப்பாற்றும் பணியில் தனது உயிரை ஆகுதியாக்கிய அந்த பொலிஸ் அதிகாரிக்கு எமது அஞ்சலியைத் தெரிவிப்பதுடன், அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன், நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொலை முயற்சி தாக்குதலானது நீதித்துறை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே பார்க்கப்பட வேண்டும்” என சுட்டிக்காட்டியிருந்தனர்.

Thanks

Arunan