நீதித்துறையின் சுதந்திரத்தை இழந்தால் கடந்த காலக்காட்டாட்சியின் பாதைக்கு நாடு சென்று விடும்

ஞா.ஸ்ரீநேசன் பா. உ
அரசாங்கம்; என்னும் போது அதில் 3 துறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அத்துறைகளில் சட்டத்துறை, நிறைவேற்றுத்துறை என்பன எப்போதும் அரசியல் சார்பான துறைகளாக இருந்து கட்சி சார்பாகச் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் நீதித்துறை என்பதுதான் மக்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய துறையாகக் கொள்ளப்படுகின்றது என நீதியின் காவலர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்  என்ற தலைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்..
நீதித்துறையில் காணப்படக்கூடிய கடமை, கண்ணியம் கட்டுப்பாடுடைய நீதிபதிகளால் எமது நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றது. மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றது. குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்படுகின்றது. இப்படியான கண்ணியமான, புண்ணியமான பணியில் தன்னை அர்ப்பணித்தவர்தான் நீதிபதி இளஞ்செழியன் அவர்கள். அவர், புங்குடுதீவில் இடம்பெற்ற பாடசாலை மாணவி வித்தியாவின் கூட்டுப்பாலியல் வன்புணர்வு, படுகொலை தொடர்பான விசாரணையினைச் செய்து கொண்டிருக்கும் போது இப்படியான கொலை அச்சுறுத்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. பாதுகாப்பு உத்தியோகஸ்தரும் கொல்லப்பட்டுள்ளார். எனவே, இவ்விடயம் மீது நல்லாட்சி அரசு கூடிய கவனம் செலுத்தி குற்றவாளியினையும், பிண்னனியாளர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தியாக வேண்டும்.

ஏற்கனவே நீதிபதி சரத் அம்பேபிட்டிய அவர்கள், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குற்றவாளிகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டிருந்த காலத்தில் , வீதியில் செல்லும் போது படுகொலை செய்யப்பட்டமை மீட்டுபார்க்க வேண்டியதாகும். அதன் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருந்ததாலும், நியாயமான நீதிபதியொருவரை நாம் இழந்துவிட்டோம்.

அதே பாணியில், நிதித்துறையில் ஆளுமையை பாதுகாத்து உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் புகழ் சேர்த்திருக்கின்ற நீதிபதி இளஞ்செழியன் போன்றவர்களைப் பாதுகாக்க வேண்டியதும், நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியதும் நல்லாட்சி அரசின் முதற்தரமான அவசர பணியாகியுள்ளதை 22.07.2017 அன்றைய சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது நாட்டுக்கு இருக்கக்கூடிய நற்பண்புகளில் ஒன்று நீதித்தறையின் சுதந்திரமாகும். அதனை இழந்தால்,  கடந்த காலக்காட்டாட்சியின் பாதைக்கு நாடு சென்று விடும் என்பதை எச்சரிக்கையோடு தெரிவிக்க விரும்புகின்றேன்.
நல்லாட்சியின் முக்கியமான அடிப்படை நீதித்துறையின் சுதந்திரம் என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகின்றேன். நீதிபதிகள் அச்சுறுத்தப்பட்டால் நாட்டின் ஜனநாயகம் பலவீனமடைந்து விடும் என்பதை நல்லாட்சியினர் கவனத்திற் கொள்ள வேண்டும். நீதிபதியவர்களின் உயிருக்காகத் தனது உயிரை நீத்த பொலிஸ் அதிகாரிக்கு அஞ்சலியையும் செலுத்துகின்றோம் என தெரிவித்துள்ளார்.