நாட்டு மக்களின் நலனுக்காகவே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம்

நாட்டு மக்களின் தேவை மற்றும் நலனுக்காகவே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்படுகிறது சர்வதேசத்தை தேவையை நிறைவேற்றுவது அல்ல என்று  பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
வானொலி நிகழ்ச்சியொன்றில் நேற்றுக் காலை கலந்து கொணடபோதே  பிரதியமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்மூலம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் பெருமையுடன் வாழக்கூடிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் காணாமல் போனோர் சம்பவங்கள் இடம்பெறாத வகையில் இருப்பதற்கு இவ்வாறான பொறிமுறை ஒன்று தேவை இருந்ததாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய அலுவலகம் ஒன்றை அமைப்பதன் மூலம் படையினருக்கு எதிராக குற்றச்சாட்டை சுமத்துவது அல்லது அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் போன்றவை எந்த வகையிலும் இடம்பெறாது. இருப்பினும் காணாமல் போனோர் தொடர்பில் என்ன நடந்தது என்பதை அவர்களது குடும்பங்களுக்கு அறிவித்தல், தேவையான நிவாரணத்தை வழங்குவதல் ஆகிய விடயங்கள் இதன்மூலமாக இடம்பெறும் என்று பிரதியமைச்சர் தெரிவித்தார.
காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களின் கூட்டமைப்பின் தலைவர் பிரிடோ பெர்னாண்டோ நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில், காணாமல் போனோர் தொடர்பான சம்பவம் குற்றச் செயலாக ஏற்றுக்கொள்வதை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் எதிர்க்கின்றனர். இவ்வாறு எதிர்ப்பது மீண்டும் இவ்வாறான சம்பவங்களை மேற்கொள்ளும் நோக்கிலா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைக்கு இவ்வாறு தீர்வை பெற்றுக்கொடுக்கும் அரசாங்கத்தை பாராட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார். இதில் தாம் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க காணாமல் போனோர் தொடர்பான சட்டம் சர்வதேச இணக்கப்பாட்டுக்கு அமைவாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார். காணாமல் போனவர்கள் சாதாரண மக்களின் பிள்ளைகள் ஆவார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.