வீதியில் நின்ற இளைஞன் மீதே ஆயுததாரி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்’

“வீதியில் நின்ற இளைஞன் மீதே, ஆயுததாரி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்” என நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தை நேரில் பார்த்ததாகத் தெரிவித்த இளைஞர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாம் வீதியால் வந்து கொண்டிருந்தவேளை, நல்லூர் பின் வீதியில் உள்ள கோவில் வீதி பருத்துறை வீதி சந்திக்கு அருகில் இளைஞர் ஒருவர் நின்றிருந்தார். அவரது ஆடையில் வர்ண நிறபூச்சுக்கள் (பெயின்ட்) காணப்பட்டன. அவரை பார்க்கும் போது வர்ண நிறபூச்சு (பெயின்ட் அடிக்கும்) வேலைக்கு சென்று வந்தவர் போன்று காணப்பட்டார்.

குறித்த இளைஞன் மீது ஆயுததாரி ஒருவர் கைத்துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். அவ்வேளை அந்த வீதியால் எமக்கு பின்னால் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் வாகனமும் வந்து கொண்டிருந்தது.

துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து நாமும் வீதியால் வந்து கொண்டிருந்த நீதிபதியும் வாகனத்தை நிறுத்தினோம். அதன்பின்னர் நாமும் நீதிபதியின் வாகனத்தில் வந்திருந்த நீதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தரான பொலிஸ் உத்தியோகத்தரும் துப்பாக்கிதாரியை பிடிக்க முயன்றோம்.

அதன்போது, துப்பாக்கிதாரி எம்மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். அதன்போது நீதிபதியின் பாதுக்காப்பு உத்தியோகத்தர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, துப்பாக்கிதாரி வீதியால் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வயோதிப தம்பதிகளின் மோட்டார் சைக்கிளை, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பறித்து கொண்டு தப்பிச்செல்ல முயன்றவேளை மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து வீதியோர மதிலில் மோதுண்டது.

அதன்போது துப்பாக்கிதாரியின் கையில் இருந்த கைத்துப்பாக்கி வீதியில் வீழ்ந்தது. அதை கைவிட்டு துப்பாக்கிதாரி கோவில் வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்” என தெரிவித்தார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சம்பவ இடத்தில் பத்து வெற்று துப்பாக்கி சன்னங்கள் காணப்பட்டன. துப்பாக்கிதாரி வீழ்த்தி சென்ற நிலையில் மீட்கப்பட்ட கைத்துப்பாக்கியானது, 12எம்.எம் வகையை சேர்ந்து எனவும், துப்பாக்கி மீட்கப்பட்ட போது மகசீன் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tamilmirror