உகந்தமலைமுருகனின் கொடியேற்றம் 24இல்:கதிர்காமக்கந்தனின் கொடியேற்றம் 23இல்!

காரைதீவு நிருபர் சகா –
வரலாற்றுப்பிரசித்திபெற்ற இருபெரும் முருகனாலயங்களின் கொடியேற்றமும் தீர்த்தோற்சவமும் இம்முறை இருவேறு தினங்களில் நடைபெறவுள்ளது.
கதிர்காமக்கந்தனாலயத்தின் கொடியேற்றம் 23ஆம் திகதியும் உகந்தமலை முருகனாலயத்தின் கொடியேற்றம் எதிர்வரும் 24ஆம் திகதியும்  நடைபெறவிருக்கிறது.
அதேபோல் உகந்தமலைமுருகனாலய தீர்த்தோற்சவம் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதியும் கதிர்காம தீர்த்தோற்சவம் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதியும் நடைபெறவிருக்கிறது.
காட்டுப்பாதை நாளை 15ஆம் திகதி திறக்கப்பட்டு ஆகஸ்ட் 2ஆம் திகதி மீண்டும் பூட்டப்படவுள்ளது. இடைப்பட்ட காலத்தில் மாத்திரம் தான் பாதயாத்திரீகர்கள் காட்டுப்பாதையால் பயணிக்கமுடியும்.
திருக்கோவில் தீர்த்தம் 23இல்!
வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த  ஆடிஅமாவாசை  உற்சவம்    06ஆம் திகதி ஆரம்பமாகியது. இவ் ஆடிஅமாவாசை உற்சவம்  யூலை மாதம்23ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையிலும் ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் பிரசன்னத்திலும்  உற்சவம் இடம்பெற்றுவருகின்றது  என ஆலயத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
தேசத்துக்கோவில் என்பதால் 18நாட் பூசைகளையும் கரைவாகுப்பற்று காரைதீவு  தொடக்கம் தம்பிலுவில் திருக்கோவில் ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த அன்பர்களால் நடாத்தப்படும்.
இன்று(14)ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனை பாண்டிருப்பு நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு நீலாவணை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய கரைவாகுப்பற்றுப்பொதுமக்களின் திருவிழாவாகும்.16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காரைதீவு பொதுமக்களின் திருவிழாவாகும்.
ஆரம்பம் தொடக்கம் பிதிர்க்கடன் செலுத்தும் தீர்த்தம் வரை திருக்கோவில் ரிகேபி அரிசிஆலை உரிமையாளர் கனகசபை பாஸ்கரனால் அன்னதானம் வழங்கப்படும்.
வழமைபோல நீர்வசதி சுகாதாரவசதி போக்குவரத்துவசதி மின்சாரவசதி மலசலகூடவசதிகள்  அடியார்கள் பாதயாத்திரீகர்களின் அடிப்படை உரிமை நலன்பேணும் விடயங்கள் உள்ளிட்ட பல வசதிகள் பற்றி விரிவாகஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உற்சவ தினங்களில் விசேடபஸ்  போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
25ஆம் திகதி இடம்பெறும் பைரவர் பூசையுடன் உற்சவம் நிறைவடையும்.