வரலாற்று சாதனை படைத்தது பன்சேனை பாரி

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலயம், இவ்வருடம் நடைபெற்ற கிழக்கு மாகாண மட்டத்திலான பாடசாலை மாணவர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் எட்டு பதக்கங்களை பெற்று சாதனையை நிலை நாட்டியுள்ளது.
290மாணவர்களையும், தரம் 11வரையான வகுப்புக்களையும் கொண்ட பன்சேனை பாரி வித்தியாலயம், வயல்வெளிகளையும், காடுகளையும் அண்டிய பிரதேசத்தில் அமைந்திருக்கின்றது.
இப்பாடசாலைக்கு பல கிராமங்களில் இருந்து மாணவர்கள் வருகைதருகின்றனர். இவ்வாறான மாணவர்கள் 5கிலோமீற்றர், 3கிலோமீற்றர், 2கிலோமீற்றர் என்னும் தூரங்களில் இருந்தே பாடசாலைக்கு சமூகம் கொடுக்கின்றனர்.
பாதணி, கற்றலுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கே இடர்படும், குடும்பங்களை சேர்ந்த மாணவர்களே இப்பாடசாலையில் முழுமையாக கற்றுவருகின்றனர். இதனால் இடையிலே பாடசாலையை விட்டு விலகுகின்ற நிலையும் இருந்து கொண்டே இருக்கின்றன.
அதேபோன்று, விளையாட்டு பயிற்சிக்கான மைதானம், விளையாட்டு உடை, பாதணி, விளையாட்டு உபகரணங்கள் இன்றியும், அதற்கு மேலாக போசாக்கு குறைவானவர்களாகவும் இங்குள்ள மாணவர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். இவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து, ஆறு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் உள்ளடங்கலாக மொத்தமாக எட்டு பதக்கங்களை பெற்று மாகாணத்திலே சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர்.
உதைபந்தாட்டப்போட்டியில் பெண்கள் அணியினர், முதலிடத்தினையும், 4ஓ400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் முதலிடத்தினையும், 4ஓ100மீற்றர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தினையும், பா.வசந்தினி என்ற மாணவி 400மீற்றர், 800மீற்றர், 1500மீற்றர் போட்டிகளில் முதலிடத்தினையும், இ.கஜந்தி என்ற மாணவி 100மீற்றர், நீளம் பாய்தல் போன்றவற்றில் முதலிடத்தினையும், முப்பாய்ச்சலில் இரண்டாம் இடத்தனையும் பெற்றுள்ளனர். இதன்மூலம் சிறந்த வீராங்கணைகளாக இருமாணவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசமாகவும், வசதி வாய்ப்புக்கள் குறைந்த நிலையிலும், காணப்படும் இவ்வாறான பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் திறமைகளை தேசியமட்டம், சர்வதேசமட்டங்களுக்கு கொண்டு சென்று பிரகாசிப்பதற்கு அவர்களுக்கான உதவிகளையும் வழங்கி வேண்டிய கட்டாயதேவையும் இருக்கின்றது. என உடற்கல்வி ஆசிரியர் தெரிவித்தார்.