செல்லக்கூடாத இடங்களுக்கு செல்லுகின்றனர். செல்லவேண்டிய இடத்திற்கு செல்வதில்லை.

(படுவான் பாலகன்) செல்லக்கூடாது என்று கூறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்லுகின்றனர். செல்லவேண்டிய இடத்திற்கு செல்கின்றார்கள் இல்லை என மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தெரிவித்தார்.

அமைப்புக்களினாலும், அரச திணைக்களங்களினாலும் நடாத்தப்படும் கல்விக் கருத்தரங்குகளுக்கு மாணவர்கள் செல்வது குறைவாக இருக்கின்றது. எனவும் மேலும் குறிப்பிட்டார்.

மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில், கல்வி பயின்று இவ்வருடம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான, இலவச வழிகாட்டல் கருத்தரங்கு இன்று(19) புதன்கிழமை ஆரம்பமானது.

கொக்கட்டிச்சோலை மக்கள் நல இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில், கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் ஆரம்பமான இக்கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

பரீட்சையில் தோற்றவிருக்கும், மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இக்கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 22ம் திகதி வரை காலை 8.30மணி தொடக்கம், பி.ப.3.30மணிவரை நடைபெறவுள்ளது.

வலயக்கல்விப்பணிப்பாளர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், மாணவர்கள் தமக்கு தேவையான கல்விசார் விடயங்களை தேடிக் கற்றுக்கொள்ள வேண்டும். அதேவேளை நேர முகாமைத்துவத்தினையும் பின்பற்ற வேண்டும். பாடசாலைப் பருவத்திலேயே நேர முகாமைத்துவத்தை பின்பற்றுகின்றபோதுதான், எதிர்காலத்திலும் நேரத்திற்கு மதிப்பளிப்பவர்களாக உருவாகுவர் என்றார்.

கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வுக்கு, மண்முனை தென்மேற்கு பிரதேச சமூகசேவை உத்தியோகத்தர் பி.குணரெத்தினம், கிராமசேவை உத்தியோகத்தர்கள், அதிபர், ஆசிரியர்கள், கொக்கட்டிச்சோலை வர்த்தக சங்கத்தினர;, மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

குறித்த அமைப்பானது வறிய மக்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.